மேட்டுப்பாளையம்-சூலக்கல் இடையே தண்டவாள சீரமைப்பு பணி
மேட்டுப்பாளையம்-சூலக்கல் இடையே தண்டவாள சீரமைப்பு பணி நடந்தது. இதையொட்டி ரெயில்வே கேட் மூடப்பட்டதால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
கிணத்துக்கடவு
மேட்டுப்பாளையம்-சூலக்கல் இடையே தண்டவாள சீரமைப்பு பணி நடந்தது. இதையொட்டி ரெயில்வே கேட் மூடப்பட்டதால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
தண்டவாள சீரமைப்பு
கோவை-பொள்ளாச்சி இடையே அகல ெரயில் பாதைகள் அமைக்கப்பட்டு ெரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வழித்தடத்தில் சொலவம்பாளையம்-அரசம்பாளையம், தாமரைக்குளம்-நல்லட்டிபாளையம், மேட்டுப்பாளையம்-சூலக்கல் இடையே 3 இடங்களில் ெரயில்வே கேட்கள் உள்ளன.
இதில் நேற்று மேட்டுப்பாளையத்தில் இருந்து சூலக்கல் செல்லும் வழியில் உள்ள ெரயில்வே கேட் பகுதியில் தண்டவாளம் சீரமைக்கும் பணி நடைபெற்றது.
ரெயில்வே கேட் மூடல்
இதையொட்டி நேற்று முன்தினம் மாலை 7 மணி முதல் மேட்டுப்பாளையத்தில் இருந்து சூலக்கல் செல்லும் வழியில் உள்ள ெரயில்வே கேட் மூடப்பட்டது.
இதுகுறித்து ஏற்கனவே ரெயில்வே சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டதோடு, அந்த பகுதியில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது. ஆனாலும் அந்த வழியே வாகன ஓட்டிகள் வந்தனர். அவர்கள் ரெயில்வே கேட் மூடி இருந்ததால், வந்த வழியே திரும்பி சென்றனர். இதனால் அவர்கள் அவதி அடைந்தனர்.
தேங்கிய மண் அகற்றம்
பொக்லைன் எந்திரம் மூலம் தண்டவாள சீரமைப்பு பணி முடிந்த பிறகு நேற்று காலை 6 மணிக்கு ரெயில்வே கேட் திறக்கப்பட்டது. அதன்பிறகு வழக்கம்போல் வாகன போக்குவரத்து மற்றும் ரெயில் போக்குவரத்து நடந்தது.
இதுகுறித்து தண்டவாள சீரமைப்பு பணியில் ஈடுபட்ட பணியாளர்கள் கூறும்போது, ெரயில்வே கேட் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் மழைக்காலங்களில் மண் தேங்கும். இதை அகற்ற தண்டவாளங்களை அகற்றுவோம். பின்னர் ஜல்லி கொட்டப்பட்டு, தண்டவாளம் பொருத்தப்படும். இந்த பணிதான் தற்போது நடந்தது என்றனர்.