ரெயில் என்ஜின் டிரைவர்கள் 'ஸ்மார்ட் வாட்ச்' அணிய தடை


ரெயில் என்ஜின் டிரைவர்கள் ஸ்மார்ட் வாட்ச் அணிய தடை
x

பணியின் போது பாதுகாப்பு கருதி ரெயில் என்ஜின் டிரைவர்கள் ‘ஸ்மார்ட் வாட்ச்' அணிய தடை விதித்து அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

புதுக்கோட்டை

'ஸ்மார்ட் வாட்ச்'

ஒடிசா ரெயில் விபத்தில் 250-க்கும் மேற்பட்ட பயணிகள் பலியானது நாடுமுழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்திற்கு சிக்னல் கோளாறு காரணமா? சதி வேலையா? என சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் நாடு முழுவதும் சிக்னல்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க ரெயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அதிகரிக்க அறிவுறுத்தி உள்ளது.

இந்த நிலையில் தெற்கு ரெயில்வேயில் மதுரை கோட்டத்தில் பணியின் போது ரெயில் என்ஜின் டிரைவர்கள் 'ஸ்மார்ட் வாட்ச்' அணிய தடை விதித்து அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.

பணியில் கவனக்குறைவு

இது குறித்து ரெயில்வே வட்டாரத்தினர் கூறியதாவது:- ஓடும் ரெயில்களில் பணியின் போது என்ஜின் டிரைவர்கள் செல்போன் பயன்படுத்த கூடாது என ஏற்கனவே உத்தரவு உள்ளது. பணியில் இருக்கும் போது என்ஜின் டிரைவர் செல்போனை 'ஆப்' செய்து வைத்துவிடுவார். அவசர தேவைக்காக 'ஆன்' செய்து பேசுவது உண்டு. அவ்வாறு பேசினாலும், எதற்காக பேசியது என்பதை சந்திப்பு ரெயில் நிலையத்தில் உள்ள என்ஜின் டிரைவர்களுக்கான அறைகள் பராமரிப்பில் வைக்கப்பட்டிருக்கும் நோட்டில் எழுத வேண்டும். இது நடைமுறையில் உள்ள விதிமுறையாகும்.

தற்போது 'ஸ்மார்ட் வாட்ச்' பயன்பாடு அதிகரித்துள்ளதால் 'புளூ டூத்' மூலம் வாட்சில் கனெக்ஷன் ஏற்படுவதால் அதில் அழைப்புகள் வந்தால் தெரிந்துவிடும். மேலும் சில 'ஸ்மார்ட் வாட்ச்'கள் 'போர்ட்டபிள் மீடியா பிளேயர்'களாக செயல்படுகின்றன. எப்.எம். ரேடியோ மற்றும் ப்ளூடூத் ஹெட்செட் வழியாக டிஜிட்டல் ஆடியோ மற்றும் வீடியோ கோப்புகளை இயக்குகின்றன. இதனால் 'ஸ்மார்ட் வாட்ச்' அணிந்து பணியாற்றுகிற போது இதுபோன்ற காரணங்களால் கவனக்குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் ரெயில் வேகமாக செல்லும் போது கவனசிதறல் ஏற்பட்டால் விபரீதமாகிவிடும். அதனால் இந்த உத்தரவை அதிகாரிகள் பிறப்பித்துள்ளனர். இந்த உத்தரவு சென்னை கோட்டத்திலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இனி அடுத்தடுத்து நடைமுறைப்படுத்துவார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story