காங்கிரஸ் கட்சி சார்பில் 15-ந் தேதி ரெயில் மறியல் போராட்டம்
அம்மூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் 15-ந் தேதி ரெயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது.
சோளிங்கர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.முனிரத்தினம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 2 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டு, எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் (வாலாஜாரோடு) ெரயில் நிலையத்தில் வருகிற 15-ந் தேதி ெரயில் மறியல் போராட்டம் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆளுங்கட்சி செய்யக்கூடிய தவறுகளை சுட்டிக் காட்டவே எதிர்க்கட்சிகள் உள்ளது. எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினால் அவர்கள் மீது பகிரங்கமாக பழிவாங்கும் நடவடிக்கையில் பா.ஜ.க. அரசு ஈடுபட்டு வருகிறது.
பிரதமர் தெரிவித்தது போல கருப்பு பணத்தை இதுநாள் வரை ஒழிக்கவில்லை. இந்தியாவை வல்லரசு நாடாக உருவாக்குவோம் என தெரிவித்தார். அதற்கான முயற்சிகளும் எதுவும் இல்லை. ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கில் 15 லட்ச ரூபாய் செலுத்துவோம் எனவும் அவர் வாக்குறுதி அளித்தார். இதுநாள் வரை 15 பைசா கூட யாருடைய வங்கி கணக்கிலும் செலுத்தப்படவில்லை. அதானிக்கு 20,000 கோடி ரூபாய் வரை கொடுக்கப்பட்டதை கேள்வி எழுப்பியதற்கு பழிவாங்கும் நடவடிக்கையில் பா.ஜ.க. அரசு ஈடுபடுகிறது.
இவ்வாறு அவர் கூறினார். மாவட்ட தலைவர் பஞ்சாட்சரம், மாவட்ட செயலாளர் அருண் பாலச்சந்திரன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்