கடலூர், விருத்தாசலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ரெயில் மறியல் 130 பெண்கள் உள்பட 370 பேர் கைது


கடலூர், விருத்தாசலத்தில்       மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ரெயில் மறியல்        130 பெண்கள் உள்பட 370 பேர் கைது
x
தினத்தந்தி 8 Sept 2023 12:15 AM IST (Updated: 8 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடலூர், விருத்தாசலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 130 பெண்கள் உள்பட 370 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடலூர்

விருத்தாசலம்,

விலைவாசி உயர்வை கண்டித்து

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். வேலையின்மையை போக்க, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். என்.எல்.சி.யில் அவுட்சோர்சிங் முறையை ரத்து செய்து, நிரந்தர வேலை வாய்ப்பை அதிகப்படுத்தி உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் செப்டம்பர் 7-ந் தேதி (அதாவது நேற்று) போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மாவட்ட செயலாளர் மாதவன் தலைமையில் மாநகர செயலாளர் அமர்நாத், ஒன்றிய செயலாளர் பஞ்சாட்சரம், சிப்காட் செயலாளர் சிவானந்தம் ஆகியோர் முன்னிலையில் ஜவான் பவன் அருகில் இருந்து திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்திற்கு பேரணியாக சென்றனர்.

ரெயில் மறியல்

பின்னர் அவர்கள் காலை 11.10 மணிக்கு சென்னையில் இருந்து கடலூர் வழியாக திருச்சி நோக்கி சென்ற சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு தலைமையில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் மற்றும் ரெயில்வே போலீசார், மறியலில் ஈடுபட்ட 40 பெண்கள் உள்பட 190 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

180 பேர் கைது

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி விருத்தாசலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருப்பையன் தலைமையில் நிர்வாகிகள் ரவிச்சந்திரன், ஜீவானந்தம், வக்கீல்கள் சந்திரசேகரன், சங்கரய்யா ஆகியோர் முன்னிலையில் ஜங்ஷன் பஸ் நிறுத்தத்தில் இருந்து ரெயில் நிலையத்திற்கு ஊர்வலமாக சென்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், தடுப்பு கட்டைகள் அமைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரை தடுத்தனர். இருப்பினும் தடையை மீறி ரெயில் நிலையத்திற்குள் சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர், மதியம் 1.05 மணிக்கு சென்னையில் இருந்து குருவாயூர் நோக்கி சென்ற குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து விருத்தாசலம் போலீசார் மற்றும் ரெயில்வே இருப்பு பாதை போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 90 பெண்கள் உள்பட 180 பேரை கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் கைதான அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story