ெரயில்வே கேட் பழுது; வாகன ஓட்டிகள் அவதி

திருச்சியில் ரெயில்வே கேட் பழுதானதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
கே.கே.நகர்,ஜூலை.21-
திருச்சியில் ரெயில்வே கேட் பழுதானதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
ரெயில்வே கேட்
திருச்சி-புதுக்கோட்டை மார்க்கத்தில் உடையான்பட்டியில் ெரயில்வே கேட் உள்ளது. மதுரை ெரயில்வே கோட்ட நிர்வாகத்தின் கீழ் செயல்படும் இந்த கேட்டில் அவ்வப்போது பழுதுகள் ஏற்பட்டு கேட் திறக்க முடியாமல் போவதால் வாகனங்களில் செல்வோர் ெரயில்வே கேட்டை கடக்க முடியாத நிலை ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் நேற்று காலை காரைக்குடியிலிருந்து புறப்பட்ட பல்லவன் விரைவு ெரயில் புதுக்கோட்டையை கடந்து திருச்சி வந்தது. வழக்கமான நேரத்தை விட சுமார் 30 நிமிடம் தாமதமாகவே, உடையான்பட்டி கேட்டை கடந்து சென்றது. ெரயில் வருவதற்காக காலை 6.30 மணியளவில் பூட்டப்பட்ட கேட் ெரயில் சென்ற பின்னர் பழுது காரணமாக திறக்க முடியவில்லை.
வாகன ஓட்டிகள் அவதி
இதனால் வாகன ஓட்டிகள் ரெயில்வே கேட்டை கடக்க முடியாமல் கடும் அவதி அடைந்தனர். இதையடுத்து அங்கு பணியாற்றிய ரெயில்வே தொழிலாளர்கள் கீரனூர் ெரயில் நிலையத்தில் உள்ள தொழில் நுட்ப வல்லுநர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு விவரத்தை கூறினர். அதன் பின், சுமார் அரை மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் கேட்டில் இருந்த பூட்டு அகற்றப்பட்டு காலை 7.05 மணிக்கு கேட் திறக்கப்பட்டது. அதன் பின்னரே கேட்டில் அணிவகுத்து நின்ற வாகனங்கள் கடந்து சென்றன.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், சிக்னல் கோளாறினால் இதுபோன்று கேட் திறக்க முடியாத நிலை அடிக்கடி ஏற்படுகிறது. இதை நிரந்தரமாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இந்த கேட் மதுரை கோட்ட நிர்வாகத்தில் வருவதாலும், அவ்வப்போது கேட் பராமரிக்கப்படாததால் இதுபோன்று ஏற்படுவதாகவும், மதுரையிலிருந்து தொழிலாளர்கள் வந்து பார்ப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும் கூறினர்.






