திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பயணிகள் நல கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல கோரிக்கை
திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி ரெயில்வே பயணிகள் நல கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடலூர்,
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வேண்டும். விழுப்புரம்- மயிலாடுதுறை, மயிலாடுதுறை- விழுப்புரம் பயணிகள் ரெயிலில் பழைய கட்டணத்தையே வசூலிக்க வேண்டும். இந்த ரெயில்களை பழைய கால அட்டவணைப்படி இயக்க வேண்டும்.
விழுப்புரம்- தாம்பரம் பயணிகள் ரெயிலை கடலூர் முதுநகர் ரெயில் நிலையம் வரை நீட்டிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரெயில்வே பயணிகள் நல கூட்டமைப்பினர் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலைய வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு அனைத்து பொது நல இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சி.குமார் தலைமை தாங்கினார். ரெயில்வே பயணிகள் நல கூட்டமைப்பு தலைவர் சாய்ராம் வரவேற்றார். கவுரவ தலைவர் கார்த்திகேயன், செயலாளர் ஆர்.குமார், பொருளாளர் ராமஜெயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் முற்போக்கு சிந்தனையாளர் இயக்க தலைவர் கு.பாலசுப்பிரமணியன், பொது நல கூட்டமைப்பு திருவரசன், அறிஞர் அண்ணா தனியார் பேருந்து பணியாளர்கள் நலச்சங்க தலைவர் செல்வம், மக்கள் அதிகாரம் ராமலிங்கம், நடிகர் திலகம் சிவாஜி பொது நல பேரவை தலைவர் தர்மராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் கூட்டமைப்பு நிர்வாகிகள் சையது முஸ்தபா, பரிதிவாணன், விடுதலை, கஜேந்திரன், சுகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.