தாம்பரம் ரெயில் நிலையத்தில் பரிதவித்த 90 வயது மூதாட்டியை மீட்டு மகனிடம் ஒப்படைத்த ரெயில்வே போலீசார்


தாம்பரம் ரெயில் நிலையத்தில் பரிதவித்த 90 வயது மூதாட்டியை மீட்டு மகனிடம் ஒப்படைத்த ரெயில்வே போலீசார்
x

பெற்ற தாயை யார் பராமரிப்பது? என 2 மகன்களிடையே ஏற்பட்ட போட்டியால் தாம்பரம் ரெயில் நிலையத்தில் பரிதவிக்கவிட்ட 90 வயது மூதாட்டியை ரெயில்வே போலீசார் மீட்டு இளைய மகனிடம் ஒப்படைத்தனர்.

செங்கல்பட்டு

90 வயது மூதாட்டி பரிதவிப்பு

சென்னையை அடுத்த தாம்பரம் ெரயில் நிலையத்தில் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்த 90 வயது மூதாட்டி ஒருவர், தனது மகனுடன் வந்திறங்கினார். பின்னர் அவருடைய மகன், அந்த மூதாட்டியை நடைமேடையில் உள்ள இருக்கையில் அமர வைத்துவிட்டு சென்றுவிட்டார். நீண்ட நேரமாகியும் மகனை காணாததால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி, ரெயில் நிலையத்தில் கண்ணீருடன் பரிதவித்து கொண்டிருந்தார். மூதாட்டி நீண்ட நேரமாக அழுது கொண்டிருப்பதை பார்த்து பரிதாபப்பட்ட மற்ற பயணிகள், அவரை தேற்றினர். எதற்காக இங்கு இருக்கிறீர்கள்? என கேட்டனர்.

ரெயில்வே போலீசார் மீட்டனர்

அதற்கு அந்த மூதாட்டி, "எனது பெயர் முத்துகாமாட்சி. நான் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் இருந்து எனது மூத்த மகன் காமராஜனுடன் ெரயிலில் வந்தேன். என்னை இங்கே உட்கார வைத்துவிட்டு எனது மகன் வந்துவிடுகிறேன் என்று கூறிவிட்டு சென்றான். இன்னும் வரவில்லை" என கண்கள் கலங்கியபடி கூறினார். இதுகுறித்து ெரயில்வே பாதுகாப்பு போலீசாருக்கு தெரிவித்தனர். அவர்கள் மூதாட்டியை மீட்டு ெரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

யார் பராமரிப்பது என போட்டி

மூதாட்டி வைத்திருந்த மஞ்சபையை சோதனை செய்தபோது அதில் இருந்த துண்டு சீட்டில் எழுதபட்டிருந்த இளைய மகன் கணேசனின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு வரவழைத்து போலீசார் விசாரித்தனர்.அப்போது பெற்ற தாயை யார் பராமரிப்பது? என்பதில் 2 மகன்கள் இடையே ஏற்பட்ட போட்டியால் விளாத்திகுளத்தில் வசிக்கும் தனது அண்ணன் காமராஜன், ரெயிலில் தாயை அழைத்து வந்து தாம்பரம் ரெயில் நிலையத்தில் இறக்கிவிட்டு சென்றதாக கூறினார்.

இதையடுத்து மூதாட்டி முத்துகாமாட்சியை இளைய மகன் கணேசனிடம் ஒப்படைத்த ரெயில்வே போலீசார், அவரை எச்சரித்தும், அறிவுரைகள் வழங்கியும் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தாம்பரம் ரெயில் நிலையத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


Next Story