ரெயில் நிலையம் அமைக்கப்படுமா?


ரெயில் நிலையம் அமைக்கப்படுமா?
x
தினத்தந்தி 29 Oct 2022 12:15 AM IST (Updated: 29 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆன்மிக சுற்றுலா மையமாக உருவெடுக்கும் அதியமான்கோட்டையில் மீண்டும் ரெயில் நிலையம் அமைக்கப்படுமா? என்று பொதுமக்கள், பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

தர்மபுரி

நல்லம்பள்ளி:

ஆன்மிக சுற்றுலா மையமாக உருவெடுக்கும் அதியமான்கோட்டையில் மீண்டும் ரெயில் நிலையம் அமைக்கப்படுமா? என்று பொதுமக்கள், பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

ஆன்மிக சுற்றுலா மையம்

தர்மபுரி மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க ஊர்களில் ஒன்றாக இருப்பது அதியமான்கோட்டை. தர்மபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தர்மபுரியில் இருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள அதியமான்கோட்டை பழங்காலத்தில் மன்னர் அதியமான் ஆட்சி செய்த பகுதியாகும். இங்கு 1,200 ஆண்டுகளுக்கு முன்பு மன்னர் அதியமானால் கட்டப்பட்டு வழிபாடு செய்யப்பட்ட பிரசித்தி பெற்ற தட்சணகாசி காலபைரவர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

இதேபோல் தொல்லியல் சிறப்புமிக்க சென்றாய பெருமாள் கோவில், தமிழை வளர்த்த அவ்வையாருக்கு அரிய நெல்லிக்கனியை வழங்கி அதியமான் சிறப்பு பெற்றதை விளக்கும் வகையில் அதியமான் கோட்டம் ஆகியவை அதியமான் கோட்டையில் அமைந்துள்ளன. வரலாற்றில் ஆர்வம் உள்ள சுற்றுலா பயணிகள் அதியமான்கோட்டை பகுதிக்கு அதிக அளவில் வர தொடங்கி உள்ளனர். இதனால் வரலாற்று பின்புலம் கொண்ட ஆன்மிக சுற்றுலா மையமாக அதியமான்கோட்டை உருவெடுக்க தொடங்கி உள்ளது.

இடிக்கப்பட்ட ரெயில் நிலையம்

தர்மபுரி- சேலம் வழித்தடத்தில் அமைந்துள்ள அதியமான்கோட்டையில் ரெயில் நிலையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. தர்மபுரி ரெயில் நிலையம் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெற்ற சூழலில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அதியமான்கோட்டை ரெயில் நிலையத்தில் ரெயில்கள் நின்று செல்வது நிறுத்தப்பட்டது. இதனால் பயன்பாடு இன்றி சிதிலமடைந்த ரெயில் நிலைய கட்டிடம் மற்றும் ரெயில்வே ஊழியர்களுக்கான குடியிருப்புகள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இடித்து அகற்றப்பட்டன.

இந்த பகுதியில் உள்ள காலபைரவர் கோவிலுக்கு சேலம், ஓசூர், பெங்களூரு மற்றும் கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ரெயில்கள் மூலம் வந்து செல்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அதியமான்கோட்டையில் மீண்டும் ரெயில் நிலையத்தை அமைத்து ரெயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆன்மிக சுற்றுலா மையமாக உருவெடுக்கும் அதியமான்கோட்டையில் மீண்டும் ரெயில் நிலையம் அமைக்கப்படுமா? என்று பொதுமக்கள், பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இதுதொடர்பாக பொதுமக்கள், ரெயில் பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

விரைவான வளர்ச்சி

அதியமான்கோட்டையை சேர்ந்த மாதையன்:-

அதியமான்கோட்டையில் செயல்பட்டு வந்த ரெயில் நிலையம் பயணிகள் வருகை குறைவாக இருப்பதாக கூறி பல ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக அதியமான்கோட்டையின் வரலாற்று சிறப்புகள் பொது மக்களுக்கு அதிக அளவில் தெரிய ஆரம்பித்துள்ளன. இங்குள்ள காலபைரவர் கோவிலுக்கு வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து அதிக பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இந்த பகுதி விரைவாக வளர்ச்சி பெற்று வருகிறது. எனவே பக்தர்கள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மீண்டும் அதியமான்கோட்டையில் ரெயில் நிலையத்தை அமைக்க வேண்டும்.

சிப்காட் தொழிற்பேட்டை

தடங்கத்தை சேர்ந்த சக்திவேல்:-

அதியமான்கோட்டை தேசிய நெடுஞ்சாலை மற்றும் புறவழி சாலைகள் கொண்ட முக்கிய போக்குவரத்து மையமாக வளர்ந்து வருகிறது. ரெயில்கள் மூலம் இந்த பகுதிக்கு வந்து செல்லும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதியமான்கோட்டை அருகே சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்த பகுதியில் கடந்த சில ஆண்டுகளில் குடியிருப்புகள் பல மடங்கு அதிகரித்து விட்டன. இங்கு பெரிய தொழிற்சாலைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இதை கருத்தில் கொண்டு அதியமான்கோட்டையில் மீண்டும் ரெயில் நிலையத்தை அமைத்து அங்கு அனைத்து ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் வெளிமாநிலங்களில் இருந்து வந்து செல்லும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் பயன் பெறுவார்கள்.

சிரமங்கள் குறையும்

பெங்களூருவை சேர்ந்த சீனிவாசன்:-

கர்நாடக மாநிலத்தில் இருந்து அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். குறிப்பாக பெங்களூரு, ஓசூர் பகுதிகளில் இருந்து பெரும்பாலானோர் ரெயில் மூலமாகவே வருகிறார்கள். இப்போது தர்மபுரி ரெயில் நிலையத்தில் இறங்கி மாற்று வாகனங்கள் மூலம் காலபைரவர் கோவிலுக்கு சென்று வர வேண்டிய நிலை உள்ளது. அதியமான்கோட்டையில் மீண்டும் ரெயில் நிலையம் அமைக்கப்பட்டால் நேரடியாக கோவில் அருகிலேயே பக்தர்கள் சென்று வர முடியும். இதனால் பக்தர்களின் சிரமங்கள் குறையும். எனவே இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story