ஈரோடு ரெயில் நிலையம் முன்பு 2 மாதங்களாக தேங்கி நிற்கும் கழிவுநீர- நடவடிக்கை எடுக்கப்படுமா?்
ஈரோடு ரெயில் நிலையம் முன்பு 2 மாதங்களாக தேங்கி நிற்கும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
ஈரோடு ரெயில் நிலையம் முன்பு 2 மாதங்களாக தேங்கி நிற்கும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
கழிவுநீர்
ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதற்காக சாலையோரமாக உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வடிகால் வசதியுடன் புதிய சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் ஈரோடு ஈ.வி.என்.ரோடு, ரெயில் நிலையம் ரோடு, காந்திஜிரோடு, காவிரிரோடு, பூந்துறைரோடு, பெருந்துறைரோடு ஆகிய சாலைகளில் நடக்கிறது.
இந்தநிலையில் ரெயில் நிலையம் முன்பு சாலையோரம் வடிகால் அமைப்பதற்காக 2 மாதங்களுக்கு முன்பே குழி தோண்டப்பட்டது. அங்கு கான்கிரீட் அமைக்கும் பணிகள் மெதுவாக நடந்து வருகிறது. மேலும், கழிவுநீர் வெளியேறாமல் அங்கேயே தேங்கி நிற்கிறது. பாசி படர்ந்த நிலையில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், கொசு உற்பத்தியாகி நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே கழிவுநீரை அகற்றிவிட்டு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
காலதாமதம்
இதுகுறித்து ரெயில்வே பயணி ஒருவர் கூறியதாவது:-
ஈரோடு வழியாக தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்படுகிறது. இதனால் ஏராளமான பயணிகள் வந்து செல்கிறார்கள். குறிப்பாக வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் பலர் ஈரோட்டுக்கு வருகிறார்கள். அவர்கள் ரெயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்தவுடன் கழிவுநீர் தேங்கி நிற்பதை பார்த்து முகம் சுளிக்கிறார்கள். ஒரு திட்டம் தொடங்கினால் சில நாட்கள் எடுத்து கொள்ளலாம். ஆனால் 2 மாதங்களுக்கு மேலாகியும் வடிகால் அமைக்க ஏன் காலதாமதத்தை அதிகாரிகள் ஏற்படுத்துகிறார்கள்? வடிகால் அமைக்க தாமதம் ஏற்பட்டாலும், கழிவுநீரை அகற்றுவதற்கான நடவடிக்கையை உடனுக்குடன் எடுக்கலாம். ஆனால் கழிவுநீர் தேங்குவது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. கழிவுநீரை அகற்றுவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பல இடங்களில் இன்னும் கான்கிரீட் தளம் அமைக்கப்படாமல் உள்ளது. எனவே பணிகள் முடிவதற்கு அதிக காலம் எடுத்து கொள்ள வாய்ப்பு உள்ளது. அதுவரை கழிவுநீர் தேங்கி நின்றால் பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும். எனவே பணிகள் ஒருபுறம் நடந்து வந்தாலும், கழிவுநீரை அகற்றுவதற்கான நடவடிக்கையை உடனுக்குடன் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.