ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும்


தினத்தந்தி 29 May 2023 7:30 PM GMT (Updated: 29 May 2023 7:30 PM GMT)

பீளமேடு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் ரெயில்வே சுரங்கபாதை அமைக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.

கோயம்புத்தூர்

பீளமேடு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் ரெயில்வே சுரங்கபாதை அமைக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.

சுரங்கப்பாதை

கோவை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கிராந்திகுமார் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.

இதில் நடைபாதை வசதி, முதியோர் உதவித் தொகை, புதிய ரேஷன்கார்டு உள்ளிட்டவை குறித்த கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். பொதுமக்கள் அளித்த மனுக்கள் வருமாறு:-

இதில் கோவை மாநகராட்சி 26-வது வார்டு கவுன்சிலர் சித்ரா வெள்ளியங்கிரி, பீளமேடு பகுதிபொதுமக்களுடன் வந்து அளித்த மனுவில், பீளமேட்டில் ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு உள்ளது.

இங்கு ரெயில்வே தண்டவாளத்தை கடக்க வசதியாக சுரங்கப்பாதை இல்லை. இதனால் பொதுமக்கள் மேம்பாலத்தின் மீது நடந்து செல்லும் போது விபத்தில் சிக்கி கொள்கின்றனர்.

எனவே உடனடியாக இங்கு ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும். கோவை-அவினாசி ரோடு விரிவாக்கம் மற்றும் மேம் பால பணிக்காக ஏராளமான மரங்கள் அகற்றப்பட்டன.

தற்போது வெயில் சுட்ெடரிப்பதால் தேவையான இடங்களில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும்.

கொரோனா தொற்றுக்கு முன் பீளமேடு காந்திமாநகருக்கு 12-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டன. தற்போது பஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு உள்ளது. எனவே நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

கள் இறக்க அனுமதி

கள் இறக்க அனுமதிக்க கோரி இந்து மக்கள் கட்சி (தமிழகம்) நிர்வாகிகள் தலையில் மண்பானை, கையில் பதனீர் பட்டையை ஏந்தியபடி வந்து அளித்த மனுவில், தமிழகத்தில் பூரண மதுவிலக் கை அமல்படுத்த வேண்டும்.

கள்ளச்சாராயம் விற்பவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

தமிழக விவசாயிகளின் நலன் கருதி பனை மற்றும் தென்னை மரத்தில் இருந்து கள் இறக்கி விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும்.

தென்னை மற்றும் பனை விவசாயிகளிடம் இருந்து தமிழக அரசே கொள்முதல் செய்து விற்க நடவடிக்கை வேண்டும்.

தமிழக அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் வரை டாஸ்மாக் கடைகளை கள்ளு கடைகளாக மாற்ற வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

அடிப்படை வசதி இல்லை

கோவை மாவட்ட மொத்த அனைத்து காய்கறி வியாபாரிகள் சங்கத்தினர் அளித்த மனுவில், கோவை எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில் 500-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடை வைத்து உள்ேளாம்.

இந்த நிலையில் மார்க்கெட்டில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதாகவும், அந்த பணிகள் முடியும் வரை கவுண்டம்பாளை யம் எருக்கம்பெனி மைதானத்தில் தற்காலிகமாக எங்களது செலவில் கடைகளை அமைத்து வியாபாரம் மேற்கொள்ளவும் மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.

ஆனால் அங்கு மின்சாரம், குடிநீர், கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. எனவே இந்த விவாகரத்தில் கலெக்டர் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வணிகம் செய்து கொண்டே மார்க்கெட்டை சீரமைக்க வழிவகை ஏற்படுத்தி தர வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

அரசூர் அருகே ஊத்துப்பாளையம் பகுதி மக்கள் அளித்த மனுவில், அரசூர் ஊராட்சி ஊத்துப்பாளையத்தில் உள்ள குட்டை மற்றும் வாய்க்கால்களை தனி நபர்கள் ஆக்கிரமித்து உள்ளனர்.

இதனால் நீர் நிலைகளுக்கு தண்ணீர் வருவது தடைபட்டு உள்ளது. எனவே நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.


Next Story