தர்மபுரியில் திடீர் மழைவிவசாயிகள் மகிழ்ச்சி
தர்மபுரி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு திடீர் மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திடீர் மழை
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று பகலில் வழக்கம் போல் வெயில் கொளுத்தியது. நேற்று இரவு தர்மபுரி நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென கருமேகங்கள் திரண்டன. பின்னர் மழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக இந்த மழை நீடித்தது
இதன் காரணமாக நேற்று இரவு தர்மபுரி நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை ஏற்பட்டது. குளிர் காற்று வீசியது.
விவசாயிகள் மகிழ்ச்சி
தர்மபுரி மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஏரிகள் மற்றும் குட்டைகளில் மழை நீர் தேங்கி உள்ளது.
இதன் காரணமாக விவசாய பணிகள் விறுவிறுப்படையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது பெய்துள்ள மழையை பயன்படுத்தி, மானாவரி சாகுபடி பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பு இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.