மாவட்டத்தில் பலத்த மழை
மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக காளையார்கோவிலில் 111 மி.மீ. பதிவானது.
மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக காளையார்கோவிலில் 111 மி.மீ. பதிவானது.
பலத்த மழை
சிவகங்கை நகரில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலையில் திடீரென்று மேகமூட்டம் ஏற்பட்டு பலத்த மழை பெய்தது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடியது. சிவகங்கை சிவன் கோவில் தெரு, காந்திவீதி, பஸ்நிலைய பகுதி, புதுத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் சாக்கடைகள் நிரம்பி மழை நீருடன் சேர்ந்து ஓடியது.
சிவகங்கை புது தெரு மரக்கடை வீதி சந்திப்பு பகுதியில் உள்ள பாலம் ஏற்கனவே உடைந்து குறுகிய பாதையாக இருந்தது. இந்த நிலையில் மழை நீர் சாக்கடையில் நிரம்பி ஓடியது. அப்போது அந்த வழியில் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் ஒருவர் ரோடு தெரியாமல் தவறி சாக்கடைக்குள் விழுந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சிவகங்கை தீயணைப்புத்துறையினர் அவரை மீட்டனர்.
111 மி.மீ. பதிவு
நேற்று காலை 6 மணி வரை மாவட்டத்தில் பதிவான மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- காளையார் கோவில் 111, சிவகங்கை 46.40, இளையான்குடி 1, திருப்புவனம் 44.02, தேவகோட்டை 4.40, காரைக்குடி 15, திருப்பத்தூர் 42, சிங்கம்புணரி 20. மாவட்டத்தில் அதிகபட்சமாக காளையார் கோவிலில் 111 மில்லி மீட்டரும், குறைந்த அளவாக இளையான்குடியில் 1 மில்லி மீட்டர் மழையும் பதிவானது.