நாமக்கல் மாவட்டத்தில் 3 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு-ஆராய்ச்சி நிலையம் தகவல்


நாமக்கல் மாவட்டத்தில் 3 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு-ஆராய்ச்சி நிலையம் தகவல்
x

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் 3 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாமக்கல்

நாமக்கல்:

மழைக்கு வாய்ப்பு

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

அடுத்த 3 நாட்கள் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று 22 மி.மீட்டரும், நாளை (வியாழக்கிழமை) 12 மி.மீட்டரும், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) 25 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 93.2 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 73.4 டிகிரியாகவும் இருக்கும்.

காற்று மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் தென்கிழக்கு திசையில் இருந்து வீசும். காற்றின் ஈரப்பதம் குறைந்தபட்சமாக 60 சதவீதமாகவும், அதிகபட்சமாக 75 சதவீதமாகவும் இருக்கும்.

குடற்புழு நீக்கம்

சிறப்பு வானிலையை பொறுத்த வரையில் மழைக்காலங்களில் காற்றின் ஈரப்பதம் அதிகம் இருக்கும் என்பதால், கலப்பு தீவனத்தின் ஈரப்பதம் 11 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்கும் போது, பூஞ்சை நச்சு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது தவிர மூட்டைகளில் இருந்து அன்றாட தேவைக்கான கலப்பு தீவனத்தை எடுத்தபின் சாக்கு பையை காற்று புகாமல் கட்டி வைக்க வேண்டும்.

பொதுவாக மழைக்காலங்களில் மேய்ச்சல் நிலங்களில் குடற்புழு நோயை உண்டாக்கும் இளநிலை பருவ புழுக்கள் அதிக எண்ணிக்கையில் காணப்படுவதால், செம்மறி மற்றும் வெள்ளாடுகளில் உருளை புழுக்களின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதனால் ஆடுகளுக்கு சாண பரிசோதனை செய்து, உருளை புழுக்களின் தாக்கம் அதிகமாக இருந்தால் குடற்புழு நீக்கம் செய்யலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story