விடிய விடிய கொட்டி தீர்த்த பலத்த மழை
வாடிப்பட்டி பகுதியில் விடிய விடிய கொட்டிய பலத்த மழையால் வீட்டு சுவர் இடிந்து விழுந்தது.
வாடிப்பட்டி,
வாடிப்பட்டி பகுதியில் விடிய விடிய கொட்டிய பலத்த மழையால் வீட்டு சுவர் இடிந்து விழுந்தது.
பலத்த மழை
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் நேற்று இரவு 9 மணி முதல் 10 மணி வரை பலத்த மழை 1 மணி நேரம் கொட்டி தீர்த்தது. அதன்பின் விடிய விடிய சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.
இந்த மழையின்போது குலசேகரன் கோட்டை மூப்பர் தெருவை சேர்ந்த மருதான் மகன் சின்ன காளை (வயது 60). விவசாய தொழிலாளி. அவரது மனைவி சின்னம்மாள் (55) ஆகியோர் ஓட்டு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப் போது திடீரென்று வீட்டின் ஒரு பகுதியில் இருந்த மண்சுவர் இடிந்து விழுந்தது. சத்தம் கேட்டு கணவன்-மனைவி 2 பேரும் அலறி அடித்து வெளியே ஓடி வந்தனர்.
அந்த சுவர் வீட்டின் உள்பகுதியில் விழாமல் சந்துக்குள் விழுந்ததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. அந்த சந்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் இடுபாடுகளில் சிக்கின.
மழைநீர் புகுந்தது
அதேபோல் சிறுமலை காற்றாற்று வெள்ளம் ஆதான் ஓடை வழியாக சென்றது. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம் முழுவதும் தண்ணீர் தேங்கி நின்றது. தாதம்பட்டி மந்தையில் உள்ள ஒட்டன்குளம் 10 ஆண்டு களுக்குப்பின் நிரம்பி வழிந்தது.
நீரேத்தான் நவநீத பெருமாள் கோவில், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், தாழ்வாக உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது. தாதம்பட்டி நீரேத்தான் மயானம் பகுதியில் கிணறு மழை வெள்ளத்தால் நிரம்பியது. மின்வாரிய அலுவலகம் நுழைவாயில் பகுதியில் பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நின்றது.
மழை அளவு
மேலும் தற்போது விவசாயம் செய்யப்பட்ட வயல்களில் நெற்பயிர்கள் பால் பிடிக்கும் பருவத்தில் உள்ளதால் அதில் தேங்கிய மழைநீர் வெட்டி விடப்பட்டு ஓடை வழியாக வடகரை கண்மாய் சென்றது. தனிச்சியம் கண்மாய் மாறு கால் பாய்ந்தது. மேலும் பல இடங்களில் மர கொப்புகள் முறிந்து விழுந்து மின்தடை ஏற்பட்டது. தகவல் அறிந்த மின்வாரிய பணியாளர்கள் உடனடியாக கொப்புகளை அகற்றி மின்சாரத்தை சீரமைத்தனர்.
மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழைஅளவு விவரம் மில்லிமீட்டரில் வருமாறு:- கள்ளந்திரி-24, சாத்தியார்அணை-38.60, வாடிப் பட்டி-95, உசிலம்பட்டி-85.40, இடைய பட்டி-40, புலிப்பட்டி- 22.40, சோழவந்தான்-30, மேட்டுப்பட்டி- 42.60, குப்பனம் பட்டி-47, வேரையூர்-12.20, ஆண்டிப்பட்டி-97.20.