தாளவாடி பகுதியில் கொட்டித்தீர்த்த கனமழை: காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாழை, தென்னை, பாக்கு மரங்கள்
தாளவாடி பகுதியில் கொட்டித்தீர்த்த கனமழையால் காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வாழை, தென்னை, பாக்கு மரங்கள் அடித்து செல்லப்பட்டன.
தாளவாடி
தாளவாடி பகுதியில் கொட்டித்தீர்த்த கனமழையால் காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வாழை, தென்னை, பாக்கு மரங்கள் அடித்து செல்லப்பட்டன.
கனமழை
ஈரோடு மாவட்டம் தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 10 நாட்களாக இரவு நேரங்களிலும், பகல் நேரங்களிலும் விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் இங்குள்ள ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி முதல் நேற்று அதிகாலை 3 மணி வரை தாளவாடி சுற்று வட்டார பகுதிகளான தலமலை, கோடிபுரம், சிக்கள்ளி, இக்கலூர், தொட்டகாஜனூர், சூசைபுரம், பனக்கள்ளி, மெட்டல்வாடி, திகினாரை, கெட்டல்வாடி மற்றும் வனப்பகுதிகளில் கன மழை கொட்டித்தீர்த்தது.
பயிர்கள் சேதம்
இந்த கனமழையால் விவசாய நிலங்களில் குளம்போல் தண்ணீர் தேங்கி நின்றது. சுமார் 10-க்கும் மேற்பட்ட ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
தொட்டகாஜனூரில் இருந்து மெட்டல்வாடி செல்லும் தரைப்பாலத்தை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்து சென்றதால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தண்ணீர் வடிந்த பின்னரே வாகனங்கள் சென்றன. அதேபோல பல்வேறு கிராமங்களில் வாழை, தக்காளி, மஞ்சள், முட்டைக்கோஸ், மக்காச்சோள பயிர்கள் சேதமடைந்தன.
தடுப்பணைகள் நிரம்பின
நெய்தாளபுரத்தில் அரசு பள்ளிக்கூடத்துக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் மாணவ, மாணவிகள் நேற்று காலை பள்ளிகளுக்கு செல்ல முடியவில்லை. இந்தகனமழை காரணமாக தாளவாடி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் நிரம்பி வழிகின்றன.
தொட்டகாஜனூர் கிராமத்தில் கருப்பாத்தாள், சண்முகம், வெங்கட் ஆகியோரின் விளைநிலங்களுக்குள் காட்டாற்று வெள்ளம் புகுந்தது.
விவசாயிகள் வேதனை
இதன் காரணமாக 1 ஏக்கர் வாழை, தென்னை, பாக்கு மரங்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடியோடு அடித்து செல்லப்பட்டன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வேதனை அடைந்தார்கள். இதுபற்றி தகவல் கிடைத்ததும் வருவாய்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
இதேபோல் காட்டாற்று வெள்ளத்தால் 5-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் உடைந்தன. அதை சரி செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.
மண்சரிவு அபாயம்
சில நாட்களாக பெய்து வரும் .தொடர் மழையால் திம்பம் மலைப்பாதையில் மண்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேபோல் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய அம்மாபேட்டை, கொடுமுடி, பெருந்துறை, சென்னிமலை, கோபி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.