விடிய விடிய கொட்டிய மழை: ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது; தரைப்பாலங்கள் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிப்பு


விடிய விடிய கொட்டிய மழையால் ஈரோடு மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. தரைப்பாலங்கள் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

ஈரோடு


விடிய விடிய கொட்டிய மழையால் ஈரோடு மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. தரைப்பாலங்கள் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

வெள்ளம் புகுந்தது

வடகிழக்கு பருவமழை காரணமாக ஈரோடு மாவட்டத்தில் நாள்தோறும் இரவு விடிய விடிய மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு ஈரோடு, பவானி, அந்தியூர், அம்மாபேட்டை, கொடுமுடி, ஊஞ்சலூர், மொடக்குறிச்சி, கோபி என பெரும்பாலான இடங்களில் மழை கொட்டித்தீர்த்தது.

இந்தநிலையில் பவானி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று நள்ளிரவு 1 மணி முதல் அதிகாலை 4 மணி வரை கனமழை பெய்தது.

பவானி வரதநல்லூர் அருகே உள்ள தாழக்குளம் ஏரி நிரம்பியது.. அதிலிருந்து வெளியான உபரிநீர் பவானியை அடுத்த தொட்டிபாளையம் ஊராட்சி பகுதியில் இருக்கும் தாழ்வான வீடுகளை சூழ்ந்தது. தொட்டிபாளையம் பழைய காலனி, மணக்காட்டு காலனி வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. மேலும் தொட்டிபாளையம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தண்ணீர் தேங்கியது.

நள்ளிரவு நேரத்தில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் வெளியே வர முடியாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கினார்கள்.

பள்ளிக்கு விடுமுறை

சாலை முழுவதும் தண்ணீர் குளமாக நின்றதால் அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி அனுப்பப்பட்டன.

பலத்த மழையால் காடையாம்பட்டி ஏரியும் நிறைந்தது. அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை தண்ணீர் சூழ்ந்ததால் பள்ளிக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.

மேலும் ஏரியில் இருந்து வெளியேறிய தண்ணீர் பவானி திருவள்ளுவர் நகரில் 80-க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்தது. பவானி பகுதியில் மட்டும் சுமார் 150 வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.

பார்வையிட்டனர்...

இந்தநிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ., நகராட்சி தலைவர் சிந்தூரி இளங்கோவன், பவானி தாசில்தார் ரவி, தொட்டிபாளையம் ஊராட்சி தலைவர் செல்வராஜ், ஊராட்சி செயலாளர் மாரியப்பன், மற்றும் தொட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சவிதா சுரேஷ் ஆகியோர் பார்வையிட்டார்கள்.

நெடுஞ்சாலை துறையினர் பொக்லைன் எந்திரத்தை கொண்டு அடைப்புகளை நீக்கி தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டார்கள்.

வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் சிரமப்பட்ட பொதுமக்களிடம் கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ. அரசின் தொகுப்பு வீடுகளில் வந்து தங்கிக்கொள்ளுமாறு கூறினார். அதற்கு அவர்கள், நாங்கள் கூலி வேலைக்கு சென்று வர இந்த இடம்தான் ஏற்றது. இங்கேயே மழை தண்ணீர் தேங்காமல் அடிப்படை வசதிகள் செய்து கொடுங்கள் என்று கேட்டார்கள்.

போக்குவரத்து துண்டிப்பு

தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய பலத்த மழை பெய்தது. தாளவாடி, தொட்டகாஞ்சனூர், அருள்வாடி, திகினாரை, ஆசனூர், சூசைபுரம், தலமலை, பனக்கள்ளி, மல்லன்குழி ஆகிய சுற்றுவட்டார கிராமங்களில் மழை கொட்டித்தீர்த்தது. இதனால் விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கி நின்றது. 10-க்கும் மேற்பட்ட ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாளவாடியை அடுத்த தொட்டகாஜனூரில் இருந்து மெட்டல்வாடி செல்லும் சாலை மற்றும் சூசைபுரத்திலிருந்து பீம்ராஜ் நகர் செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலங்களை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்து சென்றது. இதன்காரணமாக காலை 6 மணி முதல் 11 மணி வரை 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் சாலையை கடக்க முடியாமல் கடும் அவதிப்பட்டனர். வெள்ளம் வடிந்த பிறகு வாகனங்கள் சென்றன. மழைக்காலங்களில் தொடர்ந்து இந்த நிலை நீடிப்பதால் தரைப் பாலத்தை உயர்மட்ட பாலமாக அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த தொடர் மழையால் தாளவாடி பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் மற்றும் குளம் குட்டைகள் நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்தியூர்

அந்தியூர் பகுதியில் இரவு முழுவதும் விடிய விடிய மழை பெய்ததால் பெரிய ஏரி நிரம்பியது. அதன் முழு கொள்ளளவான 16 அடியை தாண்டியதால் உபரி நீர் வெளியேறியது. இதன் காரணமாக அந்தியூர் பெரியார் நகர் பகுதியில் தாழ்வான பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. சில வீடுகளுக்குள் 3 அடி ஆழத்துக்கு தண்ணீர் தேங்கி நின்றது.

மாடி வீட்டுக்காரர்கள் மொட்டை மாடியில் தஞ்சம் அடைந்தார்கள். குடிசையில் வசிப்பவர்கள் தண்ணீரில் நின்றுகொண்டே வீடுகளுக்குள் இருக்கும் பொருட்களை மீட்பதில் கவனம் செலுத்தினார்கள். சில வீடுகளுக்குள் தண்ணீருடன் பாம்புகள் ஊர்ந்து வந்தன. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

இதேபோல் அந்தியூர் தவுட்டுப்பாளையத்தில் 20-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

வாகனங்கள் ஊர்ந்து சென்றன

நேரம் செல்ல செல்ல பெரிய ஏரியில் இருந்து வௌியேறும் உபரி நீரின் அளவு அதிகரித்ததால் அண்ணாமடுவு என்ற இடத்தில் 2 அடி ஆழத்துக்கு தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடியது. அந்தியூரில் இருந்து பவானி, ஈரோடு, மேட்டூர் செல்லும் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதனால் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் வாகனங்களை ஒழுங்கு படுத்தினார்கள்.

அந்தியூர் அருகே உள்ள மூலக்கடை பகுதியில் நீரோடையில் கரையை தாண்டி சாலையில் தண்ணீர் சென்றதால் பர்கூர் சாலை மிகவும் சிதிலமடைந்தது. அதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. தண்ணீர் வடிந்த பின்னரே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன.

வெள்ள அபாய எச்சரிக்கை

இதேபோல் அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் நேற்று முன்தினம் இரவு 107.2 மில்லி மீட்டர் மழை பெய்தது. ஏற்கனவே வரட்டுப்பள்ளம் அணை நிரம்பி இருந்ததால் அணையில் இருந்து வினாடிக்கு 1727 கன அடி தண்ணீர் வெளியேறியது.

வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து வெளியேறிய தண்ணீர் கெட்டிசமுத்திரம் ஏரி, பெரிய ஏரி, சந்தியபாளையம் ஏரி வேம்பத்தி ஏரி, ஆப்பக்கூடல் ஏரிகளுக்கு சென்றது. இதனால் அனைத்து ஏரிகளும் நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

ஏரிகளில் இருந்து அதிக அளவு தண்ணீர் வெளியேறுவதால் அதை ஒட்டியுள்ள பொதுமக்களுக்கு பொதுப்பணித்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

பொது இடங்களில் தஞ்சம்

அந்தியூர் அருகே உள்ள ஆப்பக்கூடல் ஏரி நிரம்பி அதன் உபரி நீர் வெளியேறிக் கொண்டு இருக்கிறது. இதனால் குளத்து கடை என்ற இடத்தில் 10-க்கும் மேற்பட்ட குடிசைகளை தண்ணீர் சூழ்ந்தது. 50-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். வீடுகளில் இருந்த மளிகை பொருட்கள் தண்ணீரில் நனைந்துவிட்டன. இதனால் உணவு தயாரிக்க அவதிப்படுகிறார்கள். மேலும் தங்க இடமின்றி பொது இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளார்கள். வீடுகளை சூழ்ந்த தண்ணீர் வற்றினால் மட்டுமே அவர்களால் தங்களுடைய குடிசைகளுக்கு செல்ல முடியும் என்ற நிலை உள்ளது. எனவே வருவாய்த்துறை அதிகாரிகள் தங்களுக்கு தேவையான உதவிகள் செய்யவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

உருண்டு விழுந்த பாறைகள்

அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் நேற்று இரவு விடிய விடிய கனமழை பெய்தது. அதனால் ரோடுகளில் தண்ணீர் ஆறுபோல் ஓடியது. பர்கூர் மைசூரு ரோட்டில் சுண்டப்பூர் பிரிவு என்ற இடத்தில் திடீரென பாறைகள் பாதையில் உருண்டு வந்து விழுந்தன. பல்வேறு இடங்களில் மூங்கில் மரங்கள் சாய்ந்தன. அதனால் காலை 6 மணி முதல் 7 மணி வரை அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பர்கூர் போலீசாரும், நெடுஞ்சாலைத்துறையினரும் பொதுமக்கள் உதவியுடன் ரோட்டில் விழுந்த மரங்களையும், பாறைகளையும் அப்புறப்படுத்தினார்கள்.

வெள்ளித்திருப்பூர்

அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 4 நாட்களாகவே தொடர் மழை பெய்து வருகிறது. ஏற்கனவே இப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக தடுப்பணைகள் நிரம்பியுள்ளன.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையின் காரணமாக வெள்ளித்திருப்பூர் பாரதி நகரில் சுமார் 40 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் வெள்ளித்திருப்பூர்-சென்னம்பட்டி ரோட்டை தண்ணீர் மூழ்கடித்து சென்றதால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பாரதி நகரில் 2 வீடுகள் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை, வெள்ளித்திருப்பூர் ஊராட்சி தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமையில் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஊராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர். அந்தியூர் தீயணைப்புத் துறையினர் வெள்ளம் சூழ்ந்திருந்த பகுதியில் வசித்த மக்களை கயிறு கட்டி வெளியே அழைத்து வந்தார்கள். இவ்வாறு அழைத்து வரப்பட்ட 130 பேர் வெள்ளித்திருப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்திரமாக தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட வசதிகளை வருவாய்த்துறை அதிகாரிகள் செய்து கொடுத்தனர்.

ஊஞ்சலூர்

ஊஞ்சலூர் அருகில் உள்ள கொளத்துப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஜெ.ஜெ நகாில் இருக்கும் வீடுகளுக்குள் நள்ளிரவு திடீரென மழை தண்ணீர் புகுந்தது. இதையடுத்து கொளத்துப்பாளையம் ஊராட்சிதலைவர் கே.பி.ராஜ்குமார் மற்றும் ஊராட்சி பணியாளர்கள், வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு ெசன்று பாதிக்கப்பட்ட மக்களை காளிபாளையம் கோவில் மண்டபத்தில் பாதுகாப்பாக தங்க வைத்தார்கள். அவர்களுக்கு உணவும் வழங்கப்பட்டது.

மழை தண்ணீர் சூழ்ந்த பகுதியில் இருந்த கால்நடைகளும் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுவரப்பட்டன.

இதேபோல் கொடுமுடி பகுதியில் நேற்று முன்தினம் இரவு மழை வெளுத்து வாங்கியது. சோளக்காளிபாளையம் அருகே உள்ள சிட்டப்புள்ளா பாளையம் பிரிவில் சாலை ஓரத்தில் இருந்த பழமையான புளியமரம் வேரோடு சாய்ந்தது.

சிவகிரி

சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய மழை பெய்தது. சிவகிரி அருகே சடையப்பபுரம் பஸ் நிறுத்தம் அருகே சாலை ஓரத்தில் சுமார் 20 அடி தூரத்துக்கு குளம் போல் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்தார்கள். எனவே அங்கு மழை தண்ணீர் தேங்காமல் வடிகால் அமைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story