தாளவாடி பகுதியில் பலத்த மழை: தரைப்பாலத்தை மூழ்கடித்து சென்ற வெள்ளத்தால் போக்குவரத்து பாதிப்பு
தாளவாடி பகுதியில் பலத்த மழை: தரைப்பாலத்தை மூழ்கடித்து சென்ற வெள்ளத்தால் போக்குவரத்து பாதிப்பு
தாளவாடி
தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 வாரத்துக்கும் மேலாக பலத்த மழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் தாளவாடியை அடுத்த திகனாரை ஏரகனள்ளி, கெட்டவாடி, பனக்கள்ளி, நெய்தாளபுரம், கோடிபுரம், தலமலை, தமிழ்புரம் ஆகிய பகுதிகளில் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இந்த பலத்த மழையால் ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன்காரணமாக தாளவாடியை அடுத்த தொட்டகாஜனூரில் இருந்து மெட்டல்வாடி செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலத்தை வெள்ளம் மூழ்கடித்து சென்றதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனினும் ஒரு சில வாகன ஓட்டிகள் ஆபத்தை உணராமல் தரைப்பாலத்தில் கரைபுரண்டு ஓடிய காட்டாற்று வெள்ளத்தை கடந்து சென்றனர். பின்னர் மீண்டும் இரவு 7 மணி அளவில் தாளவாடி, தொட்டகாஜனூர், இரியாபுரம், சிக்கள்ளி, ஓசூர், சூசைபுரம், மெட்டல்வாடி ஆகிய பகுதியில் பலத்த மழை பெய்தது. இதைத்தொடர்ந்து மழை தூறிக்கொண்டே இருந்தது.