ஈரோட்டில் 3-வது நாளாக தொடர் மழையால் ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது


ஈரோட்டில் 3-வது நாளாக தொடர் மழையால் ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது
x

ஈரோட்டில் 3-வது நாளாக நேற்றும் பெய்த தொடர் மழையால் ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

ஈரோடு

ஈரோட்டில் 3-வது நாளாக நேற்றும் பெய்த தொடர் மழையால் ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

ஈரோட்டில் மழை

தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் பரவலாக மழையின் தாக்கம் உள்ளது. நேற்று முன்தினம் காலையில் தொடங்கிய மழை இரவு வரை தொடர்ந்தது. மீண்டும் நள்ளிரவில் மழை பெய்து ஓய்ந்தது. பின்னர் நேற்று காலை 7.30 மணிக்கு மீண்டும் சாரலாகவும், தூறலாகவும் மழைதொடங்கியது. பகல் 11 மணி அளவில் மழை விட்டது. மதியம் சிறிது நேரம் ஈரோட்டில் வெயில் அடித்தது. சிறிது நேரத்தில் மீண்டும் வானம் மேக மூட்டமாக மாறியது. அவ்வப்போது மழை தூறல் விழுந்தது. நேற்று முழுவதும் பன்னீர் தெளிப்பது போன்று பனிச்சாரலாக காற்றுடன் கலந்த மழைநீர் விழுந்துகொண்டே இருந்தது.

மழை காரணமாக ஈரோட்டில் உள்ள அனைத்து ஓடைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஏற்கனவே கடந்த முறை பெய்த பலத்த மழையால் உடைந்த பல சாலைகள் செப்பனிடப்படாததால் மீண்டும் அவை பழுதாகின. மேலும் ஈரோடு வெண்டிபாளையம் ரெயில்வே நுழைவு பாலத்தில் மழை நீர் குளம்போல் தேங்கி நின்றது.

சாலை உடைப்பு

திண்டல் பழனிக்கவுண்டன் பாளையம் ரோட்டின் குறுக்கே வரும் ஓடை பள்ளத்தின் அருகே சாலை ஓரம் முழுமையாக உடைந்து கிடக்கிறது. இதனால் கனரக வாகனங்கள் சென்றால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் தார் போடாத சாலைகள் இன்னும் குண்டும் குழியுமாக மாறி வாகன ஓட்டிகளை தடுமாற்றம் அடையச்செய்தது. தார் சாலைகளில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட இடங்களில் இன்னும் பராமரிப்பு பணிகள் செய்யாத அனைத்து பகுதிகளிலும் வாகன ஓட்டிகள் விபத்துகளை சந்தித்தார்கள். சாஸ்திரிநகர் சந்தை பகுதியில் ரோடு உடைப்பு சரி செய்யாமல் இருப்பதால் பாத சாரிகளும் மிகவும் சிரமப்பட்டனர்.

மழை அளவு

ஈரோட்டில் நேற்று காலை நிலவரப்படி பதிவான மழை அளவு மி.மீட்டர் அளவில் வருமாறு:-

சென்னிமலை-93

கொடுமுடி-67

மொடக்குறிச்சி-63

ஈரோடு-56

பெருந்துறை-54

எலந்தைகுட்டை மேடு-52.6

நம்பியூர்-52

கவுந்தப்பாடி-49.2

கொடிவேரி-45

பவானி-44.4

அம்மாபேட்டை-39.4

சத்தியமங்கலம்- 37

தாளவாடி- 36

பவானிசாகர்- 34.8

கோபி-32

வரட்டுப்பள்ளம்-31.6

குண்டேரிபள்ளம்-28.6

மேற்கண்டவாறு நேற்று காலை மழை அளவு பதிவாகி இருந்தது.

ஈரோடு மாவட்ட அளவில் அதிகபட்சமாக சென்னிமலையில் 93 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. ஒட்டு மொத்தமாக நேற்று மாவட்டத்தில் 815.60 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. சராசரி அளவு 47.97 மி.மீட்டர் ஆகும்.

நேற்று மாலையிலும் அவ்வப்போது மழை விட்டு விட்டு பெய்தது.


Related Tags :
Next Story