சிவகங்கை மாவட்டத்தில் 113 மில்லி மீட்டர் மழை பதிவு
சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 113 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இயல்படை விட இது 54 மில்லி மீட்டர் குறைவாகும்.
சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 113 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இயல்படை விட இது 54 மில்லி மீட்டர் குறைவாகும்.
மழை அளவு
வளிமண்டல சுழற்சி காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பரவலாக பலத்த மழை பெய்து வந்தது. கடந்த அக்டோபர் மாதம் மாவட்டம் முழுவதும் பெய்த பலத்த மழையால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கண்மாய்கள், குளங்கள், ஊருணிகள் உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி காட்சியளிக்கிறது. ஆண்டுதோறும் தற்போதைய நிலைவரப்படி 168.40 மில்லி மீட்டர் மழை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை மாவட்டத்தில் 113.57 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இது வழக்கமாக பெய்யும் மழை அளவை விட 54.83 மில்லி மீட்டர் குறைவாகும்.
சிவகங்கை மாவட்டத்தில் பொதுப்பணித்துறைக்கு உட்பட்ட கண்மாய்கள் 1,460, ஊராட்சி ஒன்றிய கண்மாய்கள் 4251 உள்ளன. கடந்த மாதம் முதல் பெய்த பலத்த மழையினால் 1,460 பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கண்மாய்களில் 216 கண்மாய்கள் மட்டுமே முழு கொள்ளளவை எட்டியுள்ளன. 293 கண்மாய்களில் 75 சதவீதத்திற்கு மேல் தண்ணீர் நிரம்பி உள்ளது. இதேபோல 652 கண்மாய்களில் 50 சதவீதத்திற்கு மேலும், 260 கண்மாய்களில் 25 சதவீதத்திற்கும் மேலும் தண்ணீர் உள்ளது. 9 கண்மாய்களில் மட்டுமே குறைந்த அளவு தண்ணீர் காணப்படுகிறது.
போதிய தண்ணீர்
இதே போல மாவட்டத்தில் உள்ள 4,251 ஊராட்சி ஒன்றிய கண்மாய்களில் 66 கண்மாய்கள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. 666 கண்மாய்களில் 75 சதவீதத்திற்கு மேல் தண்ணீர் உள்ளது. மேலும் 1093 கண்மாய்களில் 50 சதவீதத்திற்கு மேலும், 1,840 கண்மாய்களில் 25 சதவீதத்திற்கும் மேலும், 586 கண்மாய்களில் மிக குறைந்த அளவிலும் தண்ணீர் உள்ளது.
தற்போது வரை பெய்துள்ள மழைஅளவு மற்றும் நீர்நிலைகளில் உள்ள தண்ணீர் அளவை கொண்டு பயிருக்கு போதுமான அளவில் இருப்பதாக விவசாயிகள் கூறினர். இருப்பினும் இன்னும் அதிகமாக தொடர் மழை பெய்தால் மட்டுமே முழுமையான விவசாயம் செய்ய முடியும் என்ற நிலை உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
புதிய தடுப்பணைகள்
இதுகுறித்து நீர்நிலை பயன்படுத்துவோர் சங்க தலைவர் துபாய் காந்தி கூறுகையில், பொதுவாக காவிரி ஆற்றில் வரும் தண்ணீர் கடலில் கலந்து வீணாகி வருகிறது. இந்த தண்ணீரை கடலுக்கு செல்ல விடாமல் மாவட்டத்தில் உள்ள கண்மாய்கள், குளம், குட்டைகள், ஊருணிகளுக்கு கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு செய்வதால் விவசாயிகளின் தேவைக்கு போக மீதமுள்ள தண்ணீர் கால்நடைகளுக்கு பயன்படும்.
மேலும் தற்போது பெய்து வரும் மழை தண்ணீரை விவசாயிகள் குளம், குட்டைகள், போர்வெல் உள்ளிட்டவைகளில் தண்ணீரை சேமித்தால் பிற்காலத்தில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர், பென்னிக்குவிக் ஆகியோர் கட்டிய அணைகளுக்கு பின்னர் தற்போது தமிழகத்தில் எந்த அணையும் கட்டவில்லை. அரசு இலவசத்தை தவிர்த்து பல்வேறு மாவட்டங்களில் புதிய அணைகளை அல்லது தடுப்பணைகளை கட்டினால் அதன் மூலம் தண்ணீரை தேக்கி வைத்து விவசாயத்தை இன்னும் அதிகரிக்க முடியும் என்றார்.
தூர்வார வேண்டும்
பழனியப்பன் சூரக்குடி:- தொடர்ச்சியாக பெய்த பலத்த மழை, வடகிழக்கு பருவ மழையால் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஏராளமான கண்மாய்கள், ஆறுகள் நிரம்பி உள்ளன. இதனால் இனி வரும் காலங்களில் குடிநீர் பற்றாக்குறை இருக்காது. விவசாயிகள் இந்த தண்ணீரை பயன்படுத்தி தற்போது விவசாய பணிகளில் கவனம் செலுத்தி வரும் வேளையில் இயற்கை கொடுத்த மழைநீரை வீணாக்காமல் நன்றாக பாதுகாத்து அவற்றை பயன்படுத்த வேண்டும். மேலும் நிலத்தடி நீரை சேமிக்கும் வகையில் தண்ணீரை பயன்படுத்த வேண்டும். அதேபோல் சில பகுதிகளில் நீர்வரத்து கால்வாய்கள் தூர்வாரப்படாமல் இருப்பதால் ஊருணிகளுக்கு போதிய தண்ணீர் வரத்து இல்லை. இதனால் மழைபெய்தும் அந்த ஊருணிகளில் தண்ணீரை சேமிக்கு முடியாத நிலை உள்ளது.
வரும்காலங்களில் நீர்வரத்து கால்வாய்கள் அனைத்தையும் ஆண்டுக்கு ஒருமுறை தூர்வாரி மழைதண்ணீரை முறையாக நீர்நிலைகளுக்கு தடையின்றி கொண்டு செல்ல மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.