கடம்பூர் அருகே மரம் சாய்ந்து மின் கம்பத்தில் விழுந்தது- இருளில் மூழ்கிய கிராமம்


கடம்பூர் அருகே மரம் சாய்ந்து மின் கம்பத்தில் விழுந்தது- இருளில் மூழ்கிய கிராமம்
x

கடம்பூர் அருகே மரம் சாய்ந்து மின் கம்பத்தில் விழுந்ததில், கிராமம் இருளில் மூழ்கியது

ஈரோடு

டி.என்.பாளையம்

கடம்பூர் அருகே மரம் சாய்ந்து மின் கம்பத்தில் விழுந்ததில், கிராமம் இருளில் மூழ்கியது

மரம் சாய்ந்து விழுந்தது

கடம்பூர் அருகே உள்ள மலைக்கிராமம் மொசல்மடுவு. இந்த கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

இந்த கிராமத்துக்கு செல்லும் சாலையில் சாமக்களத்து மேடு என்ற இடத்தில் சாலையோரத்தில் இருந்த பழமையான ஆல மரம் ஒன்று நேற்று முன்தினம் திடீரென அடியோடு சாய்ந்து அருகில் உள்ள மின் கம்பத்தின் மீது விழுந்தது. இதில் அந்த பகுதியில் உள்ள 2 மின் கம்பங்கள் உடைந்து விழுந்ததுடன், மின் கம்பியும் அறுந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் மின்சாரம் தடைபட்டது.

இருளில் மூழ்கியது

உடனே அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் இதுபற்றி மின்சார வாரியத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் மின் வாரிய பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்குள்ள மின்மாற்றியில் இருந்து மின் வினியோகம் செய்யும் இணைப்பை துண்டித்துவிட்டு சென்றனர். ஆனால் சாய்ந்து விழுந்த மரத்தை அப்புறப்படுத்தி மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை. இதனால் நேற்று முன்தினம் இரவு முழுவதும் மொசல்மடுவு கிராமம் இருளில் மூழ்கியது.

குடிநீர் கிடைக்கவில்லை

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் கூறுகையில், 'எங்கள் கிராமத்தில் 120 மின் இணைப்புகள் உள்ளன. மரம் சாய்ந்து விழுந்து மின் கம்பம் உடைந்ததால் நேற்று (அதாவது நேற்று முன்தினம்) இரவு முழுவதும் எங்கள் கிராமத்தில் மின் தடை ஏற்பட்டது. இன்றும் (அதாவது நேற்று) மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை. இதனால் மின் மோட்டார்களை இயக்க முடியவில்லை. இதன்காரணமாக குடிநீர் கிடைக்காமல் நாங்கள் அவதிப்பட்டு வருகிறோம். அதுமட்டுமின்றி சாய்ந்து விழுந்த மரத்தை எடுத்தால் தான் ஊருக்குள் வாகனங்கள் செல்ல முடியும். எனவே போர்க்கால அடிப்படையில் சாய்ந்து விழுந்த மரத்தை அகற்றுவதுடன், உடைந்த மின் கம்பங்களை மாற்றி மின் இணைப்பு கொடுக்க மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


Related Tags :
Next Story