காலையில் பனிப்பொழிவு: மதுரையில் இரவில் பெய்த திடீர் மழை


மதுரையில் நேற்று காலையில் பனிப்பொழிவு இருந்த நிலையில், திடீரென இரவில் பலத்த மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியது.

மதுரை


மதுரையில் நேற்று காலையில் பனிப்பொழிவு இருந்த நிலையில், திடீரென இரவில் பலத்த மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியது.

திடீர் மழை

மதுரையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மழை பெய்தது. அதன் பின்பு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில், நேற்று காலையிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதே நேரத்தில் அதிகாலை வரை பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. எனவே மழைக்கு வாய்ப்பில்லை என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், நேற்று இரவு 8 மணி அளவில் மதுரை நகர் பகுதிகளில் பலத்த மழை பெய்ய தொடங்கியது.

சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் இடி-மின்னலுடன் பலத்த மழையாக கொட்டியது. அதன்பின்னரும் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இரவு நேரம் என்பதால் அலுவலகங்களுக்கு சென்று விட்டு வீட்டிற்கு சென்றவர்கள் மழையில் நனைந்தபடி சென்றனர். ஆங்காங்கே வாகன நெரிசலும் ஏற்பட்டது.

மின்தடை

பல இடங்களில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மதுரை பெரியார் பஸ் நிலையம், ரெயில் நிலையம், எல்லீஸ்நகர் சாலை, காளவாசல், கோரிப்பாளையம், தல்லாகுளம், அண்ணாநகர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. மழையின் காரணமாக நகரின் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஒரு சில இடங்களில் மின்சாரமும் தடைபட்டது.


Related Tags :
Next Story