டி.என்.பாளையம் பகுதியில் கனமழை கொட்டி தீர்த்தது: தரைப்பாலத்தை வெள்ளம் மூழ்கடித்ததால் போக்குவரத்து துண்டிப்பு- நெல் வயல்களில் குளம்போல் தண்ணீர் தேங்கியது


டி.என்.பாளையம் பகுதியில் கனமழை கொட்டி தீர்த்ததால் தரைப்பாலத்தை வெள்ளம் மூழ்கடித்தது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. நெல் வயல்களில் குளம்போல் தண்ணீர் தேங்கியது.

ஈரோடு

டி.என்.பாளையம்

டி.என்.பாளையம் பகுதியில் கனமழை கொட்டி தீர்த்ததால் தரைப்பாலத்தை வெள்ளம் மூழ்கடித்தது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. நெல் வயல்களில் குளம்போல் தண்ணீர் தேங்கியது.

தரைப்பாலம் மூழ்கியது

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பெரிய கொடிவேரி, டி.ஜி.புதூர் நால்ரோடு, வாணிப்புத்தூர், கொங்கர்பாளையம், பங்களாப்புதூர், கொண்டையம்பாளையம், கணக்கம்பாளையம், பெருமுகை, அத்தாணி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று அதிகாலை 2.30 மணி முதல் காலை 7 மணிவரை வரை கனமழை கொட்டி தீர்த்தது.

பலத்த மழையால் வெள்ளம் பள்ளமான இடங்களிலும், சாலையிலும் ஆறுபோல் ஓடியது. அத்தாணி- சத்தியமங்கலம் சாலையில் கொண்டையம்பாளையம் ஊராட்சி சந்தை அருகே ஜெக்கான் காட்டு பள்ளத்தின் தரைப்பாலம் மழைநீரால் மூழ்கியது.

போக்குவரத்து துண்டிப்பு

கொண்டையம்பாளையம் ஊராட்சியை ஒட்டிய வனப்பகுதியான எக்கரை, நெல்லிக்காய் திட்டு, எடைகாந்தி உள்ளிட்ட இடங்களிலும் உள்ள காட்டாற்றின் தண்ணீரும், வேதபாறை பள்ளத்தின் ஒரு பகுதி வழியாக வரும் மழைநீரும் ஜெக்கான் காட்டு பள்ளம் வழியாக வந்து பவானி ஆற்றில் கலக்கிறது.

இதனால் நேற்று காலை அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை. சுமார் 2 மணிநேரம் அந்த பகுதியே துண்டிக்கப்பட்டது.

இதனால் அத்தாணியில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் வாகன போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் மாற்று பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.

நேற்று காலை பள்ளிக்கு புறப்பட்டு வந்த மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் போக்குவரத்து பாதிப்பால் சிரமத்துக்கு உள்ளானார்கள்.

நேற்று காலை 11 மணிஅளவில் மழைநீர் வெள்ளம் படிப்படியாக குறைந்தது. அதன்பின்னரே தரைப்பாலம் வழியாக வாகனங்கள் செல்ல தொடங்கின.

உயர் மட்ட பாலம்

இதற்கிடையே ஜெக்கான் காட்டு பள்ளம் வழியாக வந்த மழைநீர் கள்ளிப்பட்டியில் இருந்து கோபி செல்லும் ரோட்டு ஓரம் இருந்த வயல்களுக்குள் புகுந்தது. சில நாட்களுக்கு முன்பு நடவு செய்யப்பட்ட நெற்பயிர்களில் தண்ணீர் சூழ்ந்து குளம்போல் வயல் காட்சி அளிக்கிறது.

ஜெக்கான் காட்டு பள்ளம் தரைப்பாலத்தை உயர்மட்ட பாலமாக கட்டித்தரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால் அதற்கான நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை.

டி.என்.பாளையம் அடுத்த கணக்கம்பாளையம் ஊராட்சி பகுதியில் மட்டும் நேற்று அதிகாலை 105.4 மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்தியூர்

அந்தியூரை அடுத்த ஆப்பக்கூடல் பகுதியில் நேற்று அதிகாலை 4.30 மணியில் இருந்து காலை 6.30 மணி வரை கனமழை பெய்தது. அதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆப்பக்கூடல் ஏரியிலிருந்து அதிகப்படியான உபரி நீர் வெளியேறி ஆப்பக்கூடல்-அத்தாணி ரோட்டில் ஓடியது.

மேலும் ஆப்பக்கூடல், கீழ்வானி, மூங்கில்பட்டி, கூத்தம்பூண்டி, வேம்பத்தி, வெள்ளாளபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள தோட்டங்களில் தண்ணீர் குளம்போல் தேங்கி நின்றது. அதேபோல் அந்தியூர் பகுதியில் காலை 6 மணியிலிருந்து 7 மணி வரை ஒரு மணி நேரம் சாரல் மழை பெய்தது.

பவானிசாகர்

பவானிசாகர் பகுதியில் கடந்த 2 நாட்களாக அதிகாலை 3 மணி முதல் காலை 8 மணிவரை மழை பெய்து வருகிறது. பவானிசாகர் பகுதியில் ஏராளமான விவசாயிகள் பூ சாகுபடி செய்துள்ளார்கள். குறிப்பாக மல்லிகை, முல்லை, கனகாம்பரம், சம்பங்கி பூக்களை அதிக அளவில் பயிரிட்டுள்ளார்கள். இந்த நிலையில் அந்த பகுதியில் பெய்யும் தொடர்மழை காரணமாக பூக்கள் பறிப்பதில் பெரிதும் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் நெல் வயல், மஞ்சள் தோட்டங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் நோய் தாக்கும் அபாயம் இருப்பதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர். நேற்று முன்தினம் இரவு 9 மணி முதல் நேற்று காலை 7 மணி வரை பவானிசாகர் பகுதியில் 43.2 மில்லி மீட்டர் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story