பலத்த மழை காரணமாக குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பியது- உபரிநீர் வெளியேற்றம்
பலத்த மழை காரணமாக குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பி உபரிநீர் வெளியேறுகிறது.
பலத்த மழை காரணமாக குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பி உபரிநீர் வெளியேறுகிறது.
குண்டேரிப்பள்ளம் அணை
டி.என்.பாளையம் அடுத்த கொங்கர்பாளையம் ஊராட்சி வினோபா நகர் பகுதியில் குன்றி மலை அடிவாரத்தில் குண்டேரிப்பள்ளம் அணை அமைந்துள்ளது. 1980-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அணையின் நீர்மட்டம் உயரம் 42 அடியாகும்.
குன்றி, விளாங்கோம்பை, கடம்பூர், மல்லியம்மன் துர்கம் உள்ளிட்ட வனப்பகுதியில் பெய்யும் மழை தண்ணீரும், 10-க்கும் மேற்பட்ட காட்டாறுகளும் குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்ப்பிடிப்பு ஆதாரங்களாக உள்ளன.
உபரிநீர் வெளியேற்றம்
குண்டேரிப்பள்ளம் அணை தண்ணீர் மூலம் வினோபாநகர், கொங்கர்பாளையம், வாணிப்புத்தூர், இந்திராநகர், மோதூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 2,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்தநிலையில் குன்றி, கம்பனூர், விளாங்கோம்பை, கல்லூத்து ஆகிய நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு சுமார் 10 மணியளவில் இருந்து 12 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்தது.
இதன் காரணமாக அணை தன் முழு கொள்ளளவான 42 அடியை தாண்டி உபரிநீர் வெளியேறுகிறது.
பவானி ஆற்றில் கலக்கிறது
நேற்று முன்தினம் காலை அணையில் இருந்து வினாடிக்கு 8 கன அடி தண்ணீர் வெளியேறியது. நேற்று காலை 6 மணி அளவில் வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 91 கன அடியாக அதிகரித்தது.
அணையில் இருந்து வெளியேறும் உபரிநீர் வினோபாநகர், கொங்கர்பாளையம், வாணிப்புத்தூர் பகுதிகளில் சென்று 2 தடுப்பணைகள் வழியாக பவானி ஆற்றில் கலக்கிறது.
தாளவாடி
தாளவாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று அதிகாலை திடீரென மழை பெய்தது. தாளவாடி, தொட்டகாஜனூர், ஒசூர், பாரதிபுரம், சூசைபுரம், திகனாரை உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை 3 மணி முதல் காலை 6 மணி வரை மழை பெய்தது. அதன்பின்னர் மழை தூறிக்கொண்டே இருந்தது.
மழை பெய்தபோது தாளவாடியில் இருந்து தொட்டகாஜனூர் செல்லும் சாலையில் ஒரு பெரிய மரம் முறிந்து விழுந்தது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினார்கள்.
மழை அளவு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழை அளவு விவரம் சென்டி மீட்டரில் வருமாறு:-
குண்டேரிப்பள்ளம்
அணை - 10
கோபிசெட்டிபாளையம்
- 9.02
எலந்தகுட்டைமேடு - 1.66
கொடிவேரி அணை - 1.52
தாளவாடி - 1.24
அம்மாபேட்டை - 1.22
பவானி - 0.64
வரட்டுப்பள்ளம் அணை
- 0.48
சத்தியமங்கலம் - 0.3