கோடை வெயில் கொளுத்திய நிலையில் மாவட்டத்தில் பரவலாக மழை-பொதுமக்கள் மகிழ்ச்சி
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் கோடை வெயில் கொளுத்தி வந்த நிலையில் நேற்று பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கோடை வெயில்
நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு அதிகபட்சமாக 104 டிகிரி வரை வெயிலின் தாக்கம் இருந்தது. இதனால் பொதுமக்கள் சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள சாலையோர குளிர்பான கடைகள் மற்றும் தர்பூசணி, முலாம்பழம், நுங்கு கடைகளை நோக்கி படையெடுத்த வண்ணம் இருந்தனர். கோடை வெயிலில் இருந்து பாதுகாக்க மழை வராதா? என பொதுமக்கள் ஏங்கினர்.
இந்தநிலையில் நேற்று காலையிலும் கோடை வெயில் கொளுத்தியது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். பிற்பகலுக்கு மேல் வானம் மப்பும், மந்தாரமுமாக காட்சி அளித்தது. தொடர்ந்து மாலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது.
திடீர் மழை
நாமக்கல் நகரில் இரவு 7.15 மணி அளவில் திடீரென கோடைமழை பெய்தது. இந்த மழை சுமார் 30 நிமிடங்கள் நீடித்தது. இதனால் சாலையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் இரவில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.
மோகனூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மாலை 4 மணிக்கு மேல் கனமழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. இதனால் சாலைகளில் மழை நீர் ஆறுபோல ஓடி, தாழ்வான பகுதிகளில் புகுந்தது. மேலும் வயல் வெளிகளிலும் தண்ணீர் தேங்கி நின்றது.
பொதுமக்கள் மகிழ்ச்சி
இதேபோல் ராசிபுரம், வெண்ணந்தூர், திருச்செங்கோடு, நாமகிரிப்பேட்டை, மோகனூர், சீராப்பள்ளி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதனால் இரவில் வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது.
இதன் காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.