ஈரோட்டில் பரவலாக மழை; மண் அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்த சாலை
ஈரோட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. சூளையில் மண் அரிப்பு ஏற்பட்டு சாலை சேதமடைந்தது.
ஈரோட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. சூளையில் மண் அரிப்பு ஏற்பட்டு சாலை சேதமடைந்தது.
சாலை சேதம்
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை, இரவு நேரங்களில் கோடை மழை பெய்து வருகிறது. பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும், இரவில் மழை பெய்து வெப்பத்தை தணிப்பது பொதுமக்களுக்கு சற்று ஆறுதலாக இருந்து வருகிறது. நேற்று முன்தினமும் ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழை காரணமாக பெரும்பள்ளம் ஓடை, பிச்சைக்காரன்பள்ளம் ஓடை, சுண்ணாம்பு ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஈரோடு சத்திரோடு சூளை பகுதியில் 4 வழிச்சாலை அமைக்கும் பணி நடந்ததால், அங்கு சாலையோரமாக மழைநீர் வடிகால் பாலம் அமைக்கப்பட்டது. அங்கு மண் அரிப்பு ஏற்பட்டதால் சாலை சேதமடைந்தது. இதனால் லாரி போன்ற கனரக வாகனங்கள் அந்த வழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே சாலையை சீரமைத்து கொடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மழை அளவு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழைஅளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
சென்னிமலை - 61, வரட்டுப்பள்ளம் அணை - 42.4, கொடுமுடி - 40.2, தாளவாடி - 28.2, பவானிசாகர் அணை - 21.4, பெருந்துறை - 14, பவானி - 10.2, மொடக்குறிச்சி - 9, கொடிவேரி அணை - 8.2, கவுந்தப்பாடி - 8, அம்மாபேட்டை - 5.6, ஈரோடு - 5, கோபிசெட்டிபாளையம், எலந்தைக்குட்டைமேடு - 3.2, சத்தியமங்கலம் - 3, குண்டேரிப்பள்ளம் அணை - 2