நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெயதது.
பரவலாக மழை
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கோடை வெயில் கொளுத்தியது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, இளநீர், மோர், கருப்புச்சாறு, குளிர்பானங்கள் ஆகியவற்றை பொதுமக்கள் வாங்கி பருகினர். மேலும் தர்பூசணி, முலாம்பழம் ஆகியவற்றையும் சுவைத்தனர்.
இந்தநிலையில் அக்னிநட்சத்திரம் தொடங்கியது முதலே நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் லேசானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழைபெய்தது.
மழை அளவு
நாமக்கல் நகரை பொறுத்த வரையில் காலை வெயிலின் தாக்கம் காணப்பட்டது. தொடர்ந்து வானத்தில் கருமேகங்கள் திரண்டன. பின்னர் மழை பெய்ய தொடங்கியது. இதனால் சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடி, தாழ்வான பகுதிகளில் புகுந்தது. மேலும் சில இடங்களில் ஆங்காங்கே தண்ணீர் குட்டை போல் தேங்கி நின்றது.
அதிகபட்சமாக ராசிபுரத்தில் 47 மி.மீட்டர் மழை பதிவானது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:-
கொல்லிமலை, 35, புதுச்சத்திரம்-33, நாமக்கல்-19, சேந்தமங்கலம்-14, கலெக்டர் அலுவலகம்-10, மங்களபுரம்-8, எருமப்பட்டி-5, பரமத்திவேலூர்-4, குமாரபாளையம்-1.
இந்த மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.