ஆசனூர் பகுதியில் கொட்டித்தீர்த்த கனமழை: தரைப்பாலத்தை மூழ்கடித்த காட்டாற்று வெள்ளம்; 100 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு- 50 கிராமங்கள் இருளில் மூழ்கின

ஆசனூர் பகுதியில் கொட்டித்தீர்த்த கனமழை: தரைப்பாலத்தை மூழ்கடித்த காட்டாற்று வெள்ளம்; 100 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு- 50 கிராமங்கள் இருளில் மூழ்கின
x

ஆசனூர் பகுதியில் ஒரு மணி நேரம் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி காட்டாற்று வெள்ளம் ஓடியதால், 100 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் மின் கம்பியில் மரம் விழுந்ததால் 50 கிராமங்கள் இருளில் மூழ்கின.

ஈரோடு

தாளவாடி

கொட்டித்தீர்த்த கனமழை

தாளவாடியை அடுத்த ஆசனூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வந்தது.

இந்த நிலையில் நேற்று மாலை ஆசனூரை அடுத்த குளியாடா, திம்பம், ஒசட்டி, தேவர்நத்தம், மாவள்ளம் மற்றும் வனப்பகுதியில் நேற்று மாலை 4 மணி அளவில் கன மழை பெய்ய தொடங்கியது. மாலை 5 மணி வரை 1 மணி நேரம் மழை கொட்டித்தீர்த்தது. இதன்காரணமாக ஆசனூர் பகுதியில் உள்ள ஓடைகள், காட்டாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் வனப்பகுதியில் உள்ள பள்ளங்கள், குட்டைகள் நிரம்பி வழிந்தன.

போக்குவரத்து துண்டிப்பு

இந்த மழையால் ஆசனூரில் இருந்து கர்நாடக மாநிலத்தை இணைக்கும் கொள்ளேகால் சாலையில் அரேப்பாளையம் பிரிவு அருகே உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் அந்த சாலையில் இரவு 7 மணி முதல் வாகன செல்ல முடியவில்லை. இதன் காரணமாக கேர்மாளம், குளியாடா, மாவள்ளம், கானக்கரை, தேவர்நத்தம் மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இதனால் அரசு மற்றும் தனியார் நிறுவன வேலைக்கு சென்றவர்கள், விவசாய கூலி வேலைக்கு சென்றவர்கள் என பலரும் தங்களுடைய மலைக்கிராமங்களுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். வெள்ளம் வடியும்வரை அந்த பகுதியில் இருளில் மலைவாழ் மக்கள் காத்திருந்து தங்களுடைய கிராமங்களுக்கு சென்றனர்.

இருளில் மூழ்கின

மேலும் இந்த மழையால் சீவக்காபள்ளம் அருகே மின் கம்பி மீது மூங்கில் மரம் முறிந்து விழுந்தது. இதன்காரணமாக அந்த பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் இருளில் மூழ்கின.

இதேபோல் தாளவாடியை அடுத்த எரகனள்ளி, சிமிட்டள்ளி, ஜீர்கள்ளி, கல்மண்டிபுரம் ஆகிய பகுதிகளில் மாலை 4 மணி முதல் 5 மணி வரை மிதமான மழை பெய்தது.

Related Tags :
Next Story