தர்மபுரி அருகே மழை நீரில் மூழ்கி 50 ஏக்கர் பயிர்கள் சேதம்-வடிகால் அமைக்க விவசாயிகள் கோரிக்கை
தர்மபுரி:
தர்மபுரி அருகே சோகத்தூரில் மழை நீரில் 50 ஏக்கர் பயிர்கள் மூழ்கி சேதமாகின. எனவே வடிகால் அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
4 வழிச்சாலை
தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் இருந்து ஓசூர் வரை சோகத்தூர் வழியாக 4 வழி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இந்த சாலை அமைப்பதற்காக சோகத்தூர் கிராமத்தில் ஏரிக்கரையை ஒட்டிய விவசாயிகளிடமிருந்து சுமார் 100 ஏக்கர் வரை விவசாய நிலங்கள் தேசிய நெடுஞ்சாலைத்துறையால் கையகப்படுத்தப்பட்டது. இதன் பின்னர் ஏரியை ஒட்டியபடி நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது.
சோகத்தூர் ஏரிக்கும் தேசிய நெடுஞ்சாலைக்கும் இடையே உள்ள 50 ஏக்கர் நிலத்தில் விவசாயிகள் நெல், சோளம், தட்டை, வாழை, சம்பங்கி பூ ஆகியவற்றை சாகுபடி செய்துள்ளனர்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கோடை மழையால், அந்த 50 ஏக்கர் விவசாய நிலத்தில் தண்ணீர் தேங்கியது. இதனால் மழை நீரில் மூழ்கி நெல், சோளம், தட்டை உள்ளிட்ட பயிர்கள் சேதமாகின. இதன் காரணமாக விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதனால் உடனடியாக தேசிய நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் மழைநீர் வடிகால் அமைத்து தர வேண்டும் என சோகத்தூர் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இழப்பீடு
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், சோகத்தூர் கிராமத்தின் வழியாக தேசிய நெடுஞ்சாலை செல்வதால், விரிவாக்க பணிக்காக சுமார் 100 ஏக்கர் நிலம் கையக்கப்படுத்தப்பட்டது. இதற்கென உரிய இழப்பீடு தராமல், குறைவான இழப்பீடு தந்துள்ளனர். எங்களிடம் கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் வழியாக தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது. இதனால் எங்களிடம் எஞ்சிய 50 ஏக்கர் நிலம் சோகத்தூர் ஏரிக்கும், தேசிய நெடுஞ்சாலைக்கும் இடையே அமைந்துவிட்டது.
நிலம் கையகப்படுத்தும் போதே அதிகாரிகளிடம் மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும் என மனு அளித்தோம். கடந்த ஒரு வருடமாக வடிகால் அமைத்து தருவதாக கூறி வந்த அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது சில நாட்கள் பெய்த கோடை மழைக்கே எங்களது நிலங்களில் மழைநீர் தேங்கி நின்று பயிர்கள் அனைத்தும் அழுகி சேதமாகிவிட்டன. இதனால் ஒவ்வொரு விவசாயிக்கும் சுமார் ரூ.10 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் சேதமடைந்த பயிர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும். எங்கள் விவசாய நிலங்களில் மழைநீர் தேங்காமல் இருக்க உடனடியாக மழைநீர் வடிகால் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகூறினர்.