சூறாவளிக்காற்றுடன் கனமழை
மடத்துக்குளம் பகுதியில் நேற்று சூறாவளிக்காற்றுடன் பெய்த கனமழையால் ஏராளமான பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது.நேற்று பகல் முழுவதும் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது.வெயிலால் அனல் பறந்த சாலைகள் திடீர் மழையால் குளிர்ந்து.பலத்த சூறாவளிக்காற்று சுழன்றடித்ததால் மடத்துக்குளத்தையடுத்த வேடப்பட்டி, செங்கண்டிப்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான தென்னை மரங்கள் ஒடிந்து விழுந்தன.மேலும் வாழை, பப்பாளி உள்ளிட்ட பயிர்களிலும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.இரவு நேரமானதால் பயிர் சேதம் குறித்து முழுமையாக கணக்கிட முடியாத நிலை உள்ளது.எனவே இன்று (செவ்வாய்க்கிழமை) வருவாய்த்துறையினர், வேளாண்மைத்துறையினர் மற்றும் தோட்டக்கலைத்துறையினர் இணைந்து முழுமையான ஆய்வு செய்வதன் மூலமே பயிர் சேதம் குறித்து முழுமையான விபரங்கள் தெரிய வரும்.
உடுமலையில் இருந்து அமராவதி மற்றும் கேரளா மாநிலத்தில் உள்ள மூணாருக்கு செல்வதற்கு போடிபட்டி, பள்ளபாளையம், குறிச்சிக்கோட்டை, மானுப்பட்டி கிராமங்கள் வழியாக சாலை அமைக்கப்பட்டு உள்ளது. அதன் வழியாக சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சென்று வருகின்றனர்.இந்த நிலையில் குறிச்சிக்கோட்டை பகுதியில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. காற்றின் வேகத்திற்கு தாக்கு பிடிக்க முடியாமல் மரம் ஒன்று உடுமலை மூணாறு சாலையில் சரிந்து விழுந்தது.இதன் காரணமாக வாகனங்கள் செல்ல முடியாமல் ஆங்காங்கே நேரம் நின்றது. அதைத் தொடர்ந்து மரம் வெட்டி அகற்றப்பட்டது. இதையடுத்து வாகனங்கள் புறப்பட்டு சென்றது. மரம் சாலையில் விழுந்ததால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.