சூறாவளி காற்றுக்கு பயிர்கள் சேதம்


சூறாவளி காற்றுக்கு பயிர்கள் சேதம்
x
திருப்பூர்


உடுமலை பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பெய்த மழையால் தென்னை, மக்காச்சோளம், நெல் உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்தது.இதனை வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

சூறாவளி காற்றுடன் மழை

உடுமலை சுற்றுப்புற பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாகும். இங்குள்ள விவசாயிகள் திருமூர்த்தி, அமராவதிஅணை, கிணறு மற்றும் ஆழ்குழாய்கிணறுகள், பருவமழையை ஆதாரமாகக் கொண்டு சாகுபடி செய்து வருகின்றனர்.

அதன்படி நெல், வாழை, கரும்பு, தென்னை, மக்காச்சோளம், காய்கறிகள் கீரைகள், சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.அவற்றை விவசாயிகள் பராமரிப்பு செய்து பலன் அடையும் நிலைக்கு கொண்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை உடுமலை, தளி, அமராவதி பகுதியில் திடீரென சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.

பயிர்கள் சேதம்

அதன் வேகத்துக்கு தாக்குபிடிக்க முடியாமல் தென்னை, மக்காச்சோளம், நெல் உள்ளிட்ட பயிர்கள் நிலத்தில் சாய்ந்தது.இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.இது குறித்த தகவல் அறிந்த வேளாண்மை துறையினர் உதவி இயக்குனர் தேவி தலைமையில் பாதிப்பு அடைந்த பகுதிக்கு சென்றனர்.

அதன்படி வளையபாளையம் பகுதியில் விவசாயிகள் தமிழ்ச்செல்வன், வடிவேலுக்கு பாத்தியப்பட்ட 25 தென்னை மரங்கள் சாய்ந்ததை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின்னர் கல்லாபுரம் பகுதிக்குச் சென்ற அதிகாரிகள் 3 ஹெக்டேர் பரப்பளவில் அறுவடை நிலையில் இருந்த நெற்பயிர்கள் தரையில் சாய்ந்து சேதமடைந்தது ஆய்வு செய்யப்பட்டது.

அதிகாரிகள் ஆய்வு

இதையடுத்து ஆண்டிய கவுண்டனூர் பகுதிக்கு சென்ற அதிகாரிகள் 3.9 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட அறுவடைக்கு தயாராகி வருகின்ற மக்காச்சோள பயிர்கள் சாய்ந்ததை ஆய்வு செய்தனர். அப்போது பாதிக்கப்பட்ட விவசாயிகள் உடன் இருந்தனர்.

பயிர்கள் சேதம் அடைந்தது குறித்து கணக்கீடு செய்யப்பட்ட அறிக்கை நிவாரண உதவிக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மழை பெய்வது விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளித்தாலும் மறுபுறம் கைக்கு பலன் கிடைக்கும் நிலையில் உள்ள பயிர்கள் சேதம் அடைவதால் வேதனை அடைந்து உள்ளனர்.


Next Story