திருப்பூரில் பலத்த காற்றுடன் கொட்டிய மழை


திருப்பூரில் பலத்த காற்றுடன் கொட்டிய மழை
x
திருப்பூர்


திருப்பூரில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் மரம் விழுந்து கார் சேதமானது. சாலையோரத்தில் நின்ற மரங்கள் விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மரம் விழுந்து கார் சேதம்

திருப்பூர் மாநகரில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதன்காரணமாக பி.என்.ரோட்டில் 5 இடங்களில் சாலையோரத்தில் நின்ற மரங்கள் முறிந்து விழுந்தது. சாந்தி தியேட்டர் பின்புறம் உள்ள வீதியில் சாலையோர மரத்துக்கு அடியில் கார் நிறுத்தப்பட்டு இருந்தது. பலத்த காற்றுக்கு மரம் வேரோடு சாய்ந்து கார் மேல் விழுந்தது. இதில் கார் கண்ணாடி உடைந்து சேதமானது.

உடனடியாக திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு உதவி மாவட்ட அதிகாரி வீரராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மரத்தை வெட்டி அகற்றி காரை அப்புறப்படுத்தினார்கள். இதுபோல் பி.என்.ரோட்டில் சரிந்த மரங்களால் போக்குகுவரத்து பாதிக்கப்பட்டது. அந்த மரங்களையும் வெட்டி அகற்றினார்கள்.

சாலையில் தேங்கிய மழைநீர்

பிச்சம்பாளையம் நால்ரோட்டில் மழைநீர் பெருக்கெடுத்து சாலையில் தேங்கியது. இதனால் இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் அந்த வழியாக செல்ல முடியாமல் சிரமம் அடைந்தனர். மழைநீர் வடிகால் அந்த பகுதியில் சரவர இல்லாததால் மழைக்காலங்களில் இதுபோன்ற பாதிப்பு ஏற்படுவதாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.

இதுபோல் கொங்கு மெயின் ரோடு, திருநீலகண்டபுரம் பகுதிகளில் சாலையோரம் நின்ற மரங்கள் சரிந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story