காட்சிப்பொருளான மழைநீர் சேகரிப்பு திட்டம்
உடுமலை பகுதியில் காட்சிப்பொருளாக மழைநீர் சேகரிப்பு திட்டம் உள்ளது. இதனை ஆய்வு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிலத்தடி நீர்இருப்பு அதிகம்
விண்ணில் இருந்து விழுகின்ற விலைமதிப்பு மிக்க மழைநீரை வீணாக்காமல் சேமிப்பதற்காக தொடங்கப்பட்டதே மழைநீர் சேகரிப்பு திட்டம் ஆகும். அதன் மகத்துவத்தை உணர்ந்த நமது முன்னோர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு தொட்டி கட்டிய வீடுகள் மூலம் மழைநீர் சேகரிப்பை உணர்த்தி உள்ளனர்.
குடிநீர், வீட்டு உபயோக தேவைகளுக்குப் போக மீதமுள்ள தண்ணீரை குழாய் அமைத்து கிணறுகளில் சேமித்து வந்துள்ளனர். இதனால் நிலத்தடி நீர்இருப்பு அபரிதமாக இருந்து வந்தது. ஆனால் காலப்போக்கில் நாகரீகம் என்ற பெயரில் ஏற்பட்ட மாற்றத்தால் திறந்த வெளிகளை சிமெண்டு தளங்களாவும், தார் சாலைகள் அமைத்தும் மூடி விடுவதால் தண்ணீர் நிலத்தில் உறிஞ்ச முடிவதில்லை.
1000 அடிக்கு ஆழ்குழாய் கிணறு
இதனால் மழைத்துளி நிலத்தில் விழுந்த வேகத்தில் சட்டென்று உருண்டோடி கழிவுநீர் கால்வாயில் கலந்து நொடிப்பொழுதில் வீணாகி விடுவது வாடிக்கையாக உள்ளது. இயற்கை அளிக்கும் விலைமதிப்பற்ற பொக்கிஷமான தண்ணீரை சேமிக்க வழி தெரியாமல் வீணாக்கி விட்டு அதை தேடி அலைவதும் 1000 அடிக்கு ஆழ்குழாய் கிணறு அமைப்பதுமே இன்றைய சந்ததியினரின் வழக்கமாக உள்ளது.
இதன் காரணமாக கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதைத் தொடர்ந்து கட்டாய மழைநீர் சேகரிப்பு திட்டம் தொடங்கப்பட்டது. இதையடுத்து வீடுகள், வணிகவளாகங்கள், தொழிற்சாலைகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் அதில் தீவிர கவனம் செலுத்திய அதிகாரிகள் ஒரு சில வருடங்களில் அந்தத் திட்டம் தொடங்கப்பட்டதற்கான நோக்கத்தை பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த மறந்து விட்டனர். இதனால் செயல் வடிவத்தில் இருந்த அந்த திட்டம் இன்று ஏட்டளவில் உள்ளது.
அலட்சியம்
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
மழைநீர் சேகரிப்பு என்ற மகத்தான திட்டம் தொடங்கப்பட்ட பின்பு ஒரு சில வருடங்களில் நிலத்தடி நீர் இருப்பு உயர்ந்தது அனைவரும் அறிவார்கள். ஆனால் அந்தத் திட்டத்தைத்தொடர்ந்து செயல்படுத்துவதில் அதிகாரிகள் முனைப்பு காட்டாததால் திட்டம் தொடங்கப்பட்டதற்கான நோக்கம் செயல் வடிவமும் வீணாகி வருகிறது.
இதனால் மழைக்காலங்களில் ஏற்படுகின்ற நீர்வரத்தை சேமிக்க முடியாமல் நீராதாரங்கள் வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்க வேண்டி உள்ளது. ஒரு சில பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு தொட்டி கண்ணுக்குத் தெரியும் ஆனால் அது முழுமை பெற்று இருக்காது. இது அதிகாரிகளின் செயலற்ற தனத்தையும் அலட்சிய போக்கையும் காட்டுகிறது.
எழுத்து வடிவில் உள்ள ஒரு திட்டம் செயல் வடிவம் பெற்று பொதுமக்களைச் சென்றடைந்து அவர்களது குடும்பத்தையும் சமூகத்தையும் முன்னேறச் செய்வதற்கு அதிகாரிகளின் பங்கு முக்கியமானதாகும்.
ஆய்வு செய்ய வேண்டும்
எனவே தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு மழை நீரை முழுமையாக சேமிக்கும் வகையில் மழைநீர் சேகரிப்பு திட்டத்திற்கு முழுவடிவம் அளித்து நிலத்தடி நீர்இருப்பை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் வீடுகள், அரசு, மற்றும் தனியார் அலுவலகங்களில் மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைக்கப்பட்டு உள்ளதா? என்று ஆய்வு செய்வதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.