கோவை நகர பகுதியில் மழை


கோவை நகர பகுதியில் மழை
x
தினத்தந்தி 12 Dec 2022 6:45 PM GMT (Updated: 12 Dec 2022 6:47 PM GMT)

கோவை நகர பகுதியில் மழை

கோயம்புத்தூர்

கோவை

கோவை நகர பகுதியில் பெய்த மழையால் மாணவ-மாணவிகள் அவதி அடைந்தனர். புறநகர் பகுதியில் பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டது.

கோவையில் மழை

கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு பகல் நேரங்களில் மிதமான வெயிலும், மதியத்திற்கு பிறகு அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று காலை முதல் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் திடீரென மழை பெய்தது. காந்திபுரம், அண்ணாசிலை, கிராஸ்கட் ரோடு, ரெயில் நிலையம், பாப்பநாயக்கன் பாளையம், டவுன்ஹால் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களிலும் தண்ணீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். இதேபோல் புறநகர் பகுதிகளான பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், காரமடை, சூலூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

மாணவர்கள் அவதி

காலை நேரத்தில் பெய்த மழை காரணமாக வேலைக்கு செல்வோர், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் சிரமம் அடைந்தனர்.

மாணவ, மாணவிகளை அவர்களது பெற்றோர் குடைபிடித்தபடி பள்ளிக்கு சென்று விட்டு வந்தனர். அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியில் வந்த பொதுமக்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் அனைவருமே தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு குடைபிடித்தபடி பயணித்தனர். ஒரு சிலர் மழையில் நனைந்தபடியே வாகனங்களிலும், நடந்தும் செல்வதையும் காண முடிந்தது.

பனிமூட்டம்

இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளான புறநகர் பகுதிகளில் கோவைப்புதூர், மதுக்கரை, சுகுணாபுரம், சுண்டக்கா முத்தூர், பேரூர், தொண்டாமுத்தூர் பகுதிகளில் காலை 8 மணி மணிவரை பனி மூட்டமாக காணப்பட்டது. இதனால் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியவில்லை. சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் அவர்கள் தங்களது வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.

மழையுடன் கடும் குளிரும் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. குளிரில் இருந்து தப்பிக்க மக்கள் சுவர்ட்டர் அணிந்து செல்லும் நிலை உள்ளத. மாலை மற்றும் இரவு நேரங்களில் கடும் குளிர் வாட்டி எடுக்கிறது.


Next Story