குமரியில் பரவலாக மழை


குமரியில் பரவலாக மழை
x

குமரியில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக சிற்றார்-1 பகுதியில் 20.6 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரியில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக சிற்றார்-1 பகுதியில் 20.6 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

பரவலாக மழை

தென்மேற்கு பருவமழை கேரளாவில் பெய்ய தொடங்கி உள்ளதால் குமரி மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. நேற்று காலையிலும் இந்த மழை நீடித்தது. அதன்படி நாகர்கோவில், மயிலாடி, பூதப்பாண்டி, தக்கலை, குழித்துறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் லேசான மழை பெய்தது.

திற்பரப்பு பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் அருவியில் மிதமான தண்ணீர் கொட்டுகிறது. நேற்று விடுமுறை தினம் என்பதால் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் சற்று அதிகமாக காணப்பட்டது. அவர்கள் அனைவரும் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.

மழை அளவு

மலையோர மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. நேற்று காலையுடன் 24 மணி நேர நிலவரப்படி அதிகபட்சமாக சிற்றார்-1 பகுதியில் 20.6 மில்லி மீட்டர் மழை பதிவானது. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

சிற்றார் 2- 4.2, கொட்டாரம்- 1.4, நாகர்கோவில் - 8, பேச்சிப்பாறை- 12.2, பெருஞ்சாணி- 4.2, தக்கலை- 4.3, சுருளோடு- 2, பாலமோர்- 3.2, மாம்பழத்துறையாறு- 1.2, அடையாமடை- 3, குருந்தன்கோடு- 6.4, முள்ளங்கினாவிளை- 7.2, ஆனைக்கிடங்கு- 1.2, முக்கடல் அணை- 1.4 என பதிவாகி இருந்தது.

அணைகளின் நீர்வரத்து

பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 614 கனஅடி நீர் வரத்தும், 871 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 179 கனஅடி நீர் வரத்தும், 160 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டன. முக்கடல் அணைக்கு வினாடிக்கு 2.6 கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 8.6 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.

சிற்றார்-1 அணைக்கு வினாடிக்கு 10 கனஅடி நீரும், சிற்றார்-2 அணைக்கு வினாடிக்கு 14 கனஅடி நீரும் வந்தது.


Next Story