குமரியில் பரவலாக மழை


குமரியில் பரவலாக மழை
x

குமரி மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

பலத்த மழை

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. அதே போல் காலை வழக்கம் போல் வெயில் அடித்தது. ஆனால் நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் திடீரென சீதோஷ்ண நிலை மாறி வானத்தில் கருமேகங்கள் திரண்டன.

தொடர்ந்து காலை 10.45 மணியளவில் மழை பெய்தது. முதலில் லேசாக பெய்த மழை நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக மாறியது. சுமார் 15 நிமிடங்கள் பலத்த மழை பெய்த நிலையில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

குறிப்பாக அவ்வை சண்முகம் சாலை, மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி சாலை, செம்மாங்குடி ரோடு, கேப் ரோடு, கே.பி. ரோடு ஆகிய இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் நாகர்கோவில் கோட்டார் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். அந்த சாலை சேறும், சகதியுமாக காட்சி அளித்தது.

இதுபோல் மார்த்தாண்டம், தக்கலை, சுங்கான்கடை உள்பட பல இடங்களில் மழை பெய்தது.

அணைகளில் தண்ணீர்

குமரி மாவட்டத்தில் தற்போது அணைகளில் போதுமான அளவு தண்ணீர் உள்ளது. அதாவது 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 40.5 அடியாகவும், பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 59.75 அடியாகவும், சிற்றார்-1 அணை நீர்மட்டம் 13.87 அடியாகவும், சிற்றார்-2 அணை நீர்மட்டம் 13.97அடியாகவும் உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 477 கனஅடியும், பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 60 கனஅடியும், சிற்றார்-1 அணைக்கு வினாடிக்கு 100 கனஅடியும், தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அதே சமயம் பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 771 கனஅடியும், பெருஞ்சாணி அணையில் இருந்து வினாடிக்கு 160 கனஅடியும், சிற்றார்-1 அணையில் இருந்து வினாடிக்கு 100 கனஅடியும் தண்ணீர் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது.

---


Next Story