திருக்கோவிலூர் நகரில் வெளுத்து வாங்கிய மழைசாலைகளில் தேங்கிய தண்ணீரால் வாகன ஓட்டிகள் அவதி


திருக்கோவிலூர் நகரில் வெளுத்து வாங்கிய மழைசாலைகளில் தேங்கிய தண்ணீரால் வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 12 Aug 2023 12:15 AM IST (Updated: 12 Aug 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் நகரில் மழை வெளுத்து வாங்கியது. சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்

பலத்த மழை

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர், கல்வராயன்மலை உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் திருக்கோவிலூர் நகரில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் விடாமல் வெளுத்து வாங்கிய இந்த மழையால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர் தாழ்வான பகுதிகளில் தேங்கி குளம்போல் காட்சி அளித்தது.

துர்நாற்றம் வீசியது

மேலும் சாலையோரம் உள்ள மழைநீர் மற்றும் கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டதால் பஸ் நிலைய பகுதி, 5 முனை சந்திப்பு, தெப்பக்குளம் தெரு, சந்தப்பேட்டை மற்றும் நகரின் முக்கிய தெருக்களில் மழைநீர் குளம் போல தேங்கி நின்றது.

மழைநீருடன், சாக்கடை நீரும் இரண்டற கலந்ததால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியது. இதனால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் மூக்கை பிடித்து செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. நாற்றம் தாங்க முடியாமல் சிலருக்கு குமட்டலும் உருவானது.

தூர்வார வேண்டும்

இதுகுறித்து திருக்கோவிலூர் நகர மக்கள் கூறுகையில், சாலைகள், தெருக்களில் மழை நீர் தேங்குவதற்கான காரணம் நகரில் உள்ள ஆவியூரான் மற்றும் சித்தேரியன் வாய்க்கால்களின் பெரும்பாலான பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் மழை நீர் வெளியேற முடியாமல் நகருக்குள் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் மழைபெய்யும் போது பள்ளி மாணவர்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். ஆகவே திருக்கோவிலூர் நகரில் உள்ள கழிவு நீர் வாய்க்கால்களை நகராட்சி நிர்வாகம் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி சுத்தம் செய்ய மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story