கூடலூரில் மழையில் நனைந்து வீணாகும் நெல்: கொள்முதல் நிலையத்திற்கு மின்வசதி ஏற்பாடு செய்ய கோரிக்கை
கூடலூரில் மழையில் நனைந்து நெல் வீணாகிறது. இதனால் கொள்முதல் நிலையத்திற்கு மின் வசதி ஏற்பாடு செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
கூடலூர் அருகே அரசு பொதுப்பணித்துறை ஆய்வாளர் மாளிகை பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக அங்கு விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர் இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர் இருப்பினும் மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி, அதிகாரிகள் நெல் கொள்முதல் செய்து வருகின்றனர். இந்த அலுவலகத்திற்கு பொதுப்பணித்துறையினர் மின் கட்டணம் செலுத்தாததால் தற்போது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் விவசாயிகளே வாடகை ஜெனரேட்டர் மூலம், நெல் கொள்முதல் நிலையத்திற்கு மின் வசதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். இருப்பினும் பணியில் காலதாமதம் ஆவதால் விவசாயிகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் கூடலூரில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பருவ மழை பெய்து வருவதால் நெல் குவியல்கள் மழையில் நனைந்து வீணாகி வருகிறது எனவே மாவட்ட ஆய்வாளர் மாளிகையில் மின் இணைப்பை ஏற்படுத்தி கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்