நிரம்பி வழியும் பாதாள சாக்கடையால் வாகன ஒட்டிகள் அவதி


நிரம்பி வழியும் பாதாள சாக்கடையால் வாகன ஒட்டிகள் அவதி
x
திருப்பூர்


திருப்பூர் காலேஜ் ரோடு கே.ஆர்.ஈ.லே-அவுட் பகுதியில் பாதாள சாக்கடை நிரம்பி வழிவதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.

பாதாள சாக்கடை

திருப்பூர் காலேஜ் ரோடு கே.ஆர்.ஈ.லே-அவுட் 6-வது வீதியில் ரோட்டின் நடுவே உள்ள பாதாள சாக்கடை நிரம்பி வழிகிறது. கடந்த ஒரு வாரமாக இங்கு கழிவு நீர் பாய்ந்தவண்ணம் இருப்பதால் அருகாமையில் குடியிருந்து வருபவர்கள் துர்நாற்றத்தால் சிரமப்பட்டு வருகின்றனர். தொடர்ச்சியாக கழிவு நீர் பாய்வதால் இப்பகுதியில் ரோடு சேதமடைந்து ஆங்காங்கே பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

மேலும் ரோடு முழுவதும் தார் பெயர்ந்து போய் எங்கும் ஜல்லிக்கற்களாக காட்சியளிக்கின்றன. இதேபோல் ரோட்டின் குறுக்காக செல்லும் கழிவு நீர் கால்வாயின் பாலமும் சேதமடைந்திருப்பதால் இப்பகுதியில் வாகனப்போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. கால்வாய்க்குள் வாகனங்கள் சிக்கி கொள்ளாமல் இருப்பதற்காக இங்குள்ளவர்கள் தற்காலிக ஏற்பாடாக ரோட்டின் குறுக்கே காய்ந்த மரத்தை போட்டுள்ளனர்.

வாகன ஓட்டிகள்நிரம்பி வழியும் பாதாள சாக்கடையால் வாகன ஒட்டிகள் அவதி அவதி

வாகனங்கள் செல்வதற்கு வழியில்லாத காரணத்தால் இந்த வீதியை யாரும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு சில இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டும் அபாயகரமான முறையில் இப்பகுதியை கடந்து செல்கின்றனர். இதேபோல் இங்கிருந்து வெளியேறும் கழிவு நீர் பிரதான ரோட்டில் பாய்ந்து கொண்டிருப்பதால் பாதசாரிகளுக்கும் இடையூறாக உள்ளது. மேலும் ரோடும் சேதமடைந்து வருகிறது.

எனவே பல நாட்களாக நீடிக்கும் இந்த பிரச்சினைக்கு அதிகாரிகள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

தற்போது மழைக்கால நோய்கள் பரவி வரும் நிலையில் இதுபோன்ற சுகாதார சீர்கேடுகளை உடனுக்குடன் களைய அதிகாரிகள் முன்வருவார்களா?.


Next Story