புதர் மண்டிக்கிடக்கும் ஓடையில் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்


புதர் மண்டிக்கிடக்கும் ஓடையில் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
x
திருப்பூர்


மடத்துக்குளம் அருகே புதர் மண்டிக் கிடக்கும் ஓடையில் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் உள்ளதால் உடனடியாக தூர்வார வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீர் மேலாண்மை

நமது முன்னோர்கள் முறையான திட்டமிடுதல் மூலம் மழைநீரை சேமித்து பயன்படுத்தி வந்துள்ளனர். வீதிகளில் விழும் மழைத்துளி வடிகால்கள் மூலம் எடுத்துச்செல்லப்பட்டு ஓடைகள், ஆறுகள், குளங்கள் மற்றும் ஏரிகளை சென்றடையும் வகையில் வடிகால்களை வடிவமைத்துள்ளனர்.

ஒரு துளி நீரையும் வீணாக்காமல் பயன்படுத்துவதன் மூலம் நீர் மேலாண்மையில் சிறந்த இடம் பெற்றுள்ளனர். ஆனால் சமீப காலங்களாக நீர்நிலைகள் பராமரிப்பில் காட்டப்படும் அலட்சியப்போக்கு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பது சமூக ஆர்வலர்களின் அச்சமாக உள்ளது.

அலட்சியம்

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

நீர் நிலைகள் மற்றும் நீர் வழித்தடங்களின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு இல்லை. இதனால் நீர் நிலைகளில் குப்பைகள் கொட்டுவது, நீர் வழித்தடங்களை ஆக்கிரமிப்பது, நீர் நிலைகளில் கழிவு நீர் கலப்பது போன்ற தவறான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் நீர் வழித்தடங்களை பாதுகாப்பதில் அரசும், அதிகாரிகளும் அலட்சியம் காட்டி வருகின்றனர்.பெரும்பாலான நீரோடைகள் ஆக்கிரமிப்பால் சுருங்கியுள்ளன.

அதுமட்டுமல்லாமல் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாத நீரோடைகளில் ஆங்காங்கே மணல் மேடுகள் உருவாகியுள்ளது. ஒரு சில பகுதிகளில் விதிகளை மீறி அளவுக்கதிகமாக மண் எடுக்கப்படுவதால் பள்ளமாகிக் கிடக்கிறது.

அத்துடன் புதர்ச் செடிகள் முளைத்து மழைநீர் செல்ல வழியில்லாத அவல நிலையில் உள்ளது. அந்த வகையில் மடத்துக்குளத்தையடுத்த கொழுமம் பகுதியிலிருந்து அமராவதி செல்லும் வழித்தடத்தில் புள்ளக்கார ஓடை குறுக்கிடுகிறது.

மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரப்பகுதிகளிலிருந்து அமராவதி ஆற்றுக்கு மழைநீரை கொண்டு சேர்க்கும் முக்கிய ஓடையாக இது உள்ளது. ஆனால் இந்த ஓடை தூர் வாரப்படாமல் மரங்கள் மற்றும் புதர்ச்செடிகள் முளைத்து பரிதாப நிலையில் உள்ளது. இதனால் மழைநீர் வழிந்தோட வழியில்லாமல் தடைபடுவதுடன், அருகிலுள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை வீணாக்கும் நிலையும் உள்ளது. எனவே இந்த ஓடையின் நீர் வழித்தடத்தில் உள்ள மரம் மற்றும் புதர்களை அகற்றவும், சீராக மழைநீர் வழிந்து செல்லும் வகையில் தூர் வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story