மழைநீர் புகும் கிராம நிர்வாக அலுவலகம்
எருமாட்டில் கிராம நிர்வாக அலுவலகத்துக்குள் மழைநீர் புகுந்து வருகிறது. எனவே, கால்வாய் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பந்தலூர்
எருமாட்டில் கிராம நிர்வாக அலுவலகத்துக்குள் மழைநீர் புகுந்து வருகிறது. எனவே, கால்வாய் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தண்ணீர் தேங்குகிறது
பந்தலூர் அருகே எருமாடு பகுதியில் கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு எருமாடு, பனஞ்சிறா, மராடி, மாதமங்கலம், தாளூர், வெட்டுவாடி, கூலால், ஆண்டன் சிறா உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் பலர் சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கவும், சான்றிதழ்களை பெறவும் வந்து செல்கின்றனர். இந்த அலுவலக கட்டிடம் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. அதன் பின்னர் பராமரிப்பு பணி நடைபெறாததால், கட்டிடம் பழுதடைந்து காணப்படுகிறது.
இந்த கிராம நிர்வாக அலுவலகம் முன்பு உள்ள எருமாடு-தாளூர் சாலையோரத்தில் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட வில்லை. இதனால் பலத்த மழை பெய்யும் சமயங்களில், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்துக்குள் வெள்ளம் புகுந்து வருகிறது. அருகில் உள்ள நூலகத்திற்கு செல்லும் நடைபாதையில் தண்ணீர் தேங்கி நிற்பதோடு, நூலகத்திற்குள்ளும் புகுந்து விடுகிறது.
சீரமைக்க வேண்டும்
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, சாதி, வருமான உள்பட பல்வேறு சான்றிதழ்கள் பெற கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சென்று வருகிறோம். அங்கு அலுவலக வளாகத்தில் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் சிலர் வழுக்கி கீழே விழுந்து காயமடைந்து உள்ளனர்.
மேலும் கிராம நிர்வாக அலுவலகம் பழுதடைந்த நிலையில் காட்சி அளிக்கிறது. கட்டிடத்தையொட்டி மழைநீர் தேங்குவதால், கட்டிடம் சிதிலமடையும் அபாயம் உள்ளது. எனவே, அலுவலக வளாகத்தில் இன்டர்லாக் கற்கள் பதிக்க வேண்டும். சாலையோரத்தில் மழைநீர் கால்வாய் அமைக்க வேண்டும். மேலும் பழுதடைந்த கிராம நிர்வாக அலுவலர் அலுவலக கட்டிடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.