சூறைக்காற்றுடன் மழை; 10 ஆயிரம் வாழைகள் சேதம்


சூறைக்காற்றுடன் மழை; 10 ஆயிரம் வாழைகள் சேதம்
x
தினத்தந்தி 5 July 2023 6:45 PM GMT (Updated: 6 July 2023 11:47 AM GMT)

செங்கோட்டை, கடையநல்லூர் பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த மழையில் 10 ஆயிரம் வாழைகள் சேதமடைந்தன.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை, கடையநல்லூர் பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த மழையில் 10 ஆயிரம் வாழைகள் சேதமடைந்தன.

சூறைக்காற்றுடன் மழை

தென்காசி மாவட்டம் செங்கோட்டை, கடையநல்லூர் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவில் சூறைக்காற்றுடன் லேசான மழை பெய்தது. தொடர்ந்து நேற்றும் பல்வேறு பகுதிகளிலும் சூறைக்காற்றுடன் மிதமான மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்தன.

செங்கோட்டை, பண்பொழி, மணல்காடு, வடகரை, அச்சன்புதூர், வடகரை, கணக்கப்பிள்ளை வலசை, குத்துக்கல்வலசை உள்ளிட்ட பகுதிகளில் உயரழுத்த மின்கம்பிகளில் மரங்கள் சரிந்து விழுந்தன.

மின்கம்பங்கள் சரிந்தன

பண்பொழியில் உயரழுத்த மின்கம்பிகளில் தென்னை மரம் சரிந்து விழுந்ததால் 3 மின்கம்பங்கள் சரிந்தன. இதனால் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. உடனே மின்வாரிய ஊழியர்கள் விரைந்து சென்று, மரக்கிளைகளை அகற்றி, மின் வினியோகத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

பண்பொழி அருகே கந்தசாமிபுரத்தில் ஆறுமுகம் என்பவரது வீட்டின் மீது மரம் சரிந்து விழுந்தது. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

10 ஆயிரம் வாழைகள் சேதம்

சூறைக்காற்று காரணமாக கடையநல்லூர் அருகே கரிசல்குடியிருப்பு பகுதியில் 10 ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்தன. மேலும் ஏராளமான தென்னை மரங்களும் சாய்ந்தன. இதனால் வேதனை அடைந்த விவசாயிள், சேதமடைந்த பயிர்களை வேளாண்மை துறையினர் பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.


Next Story