விழுப்புரத்தில் பலத்த காற்றுடன் மழை
விழுப்புரத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2 மாதமாக கோடை வெயில் சுட்டெரித்து வந்தது. அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் முடிந்து 2 வாரத்திற்கு மேலாகியும் வெயிலின் தாக்கம் இன்னும் குறையாமல் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது.
இந்நிலையில் நேற்றுவிழுப்புரத்தில் காலை முதல் மதியம் வரை வெயில் சுட்டெரித்தது. 102 டிகிரியாக வெயில் பதிவான நிலையில் சாலையில் அனல்காற்று வீசியதால் பொதுமக்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் வாடி வதங்கினர்.
இந்த சூழலில் மாலை 5.45 மணியளவில் திடீரென பலத்த காற்று வீசியது. அடுத்த சில நிமிடங்களில் இடி-மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழை இடைவிடாமல் சுமார் 15 நிமிடத்திற்கும் மேலாக கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
மரங்கள் முறிந்து விழுந்தன
மேலும் பலத்த காற்று வீசியதால் அதற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் விழுப்புரம் ரெயில் நிலைய வளாகத்தில் இருந்த 2 மரங்கள் முறிந்து விழுந்தன. இதில் ஒரு மரம் முறிந்து அங்கிருந்த ஆட்டோ மீது விழுந்ததில் அந்த ஆட்டோ சேதமடைந்தது. இதேபோல் விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் உள்ள மரம் முறிந்து, அருகில் இருந்த மின்மாற்றி மீது விழுந்ததால் அப்பகுதியில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதுதவிர விழுப்புரம் நகரின் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால் நகரம் முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
பின்னர் நகராட்சி ஊழியர்கள், மின்வாரியத்துறையினர் விரைந்து சென்று அந்த மரக்கிளைகளை அப்புறப்படுத்தி சீரான மின் வினியோகத்தை வழங்கும் பணியில் ஈடுபட்டனர். இதேபோல் விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. இந்த மழையினால், மாலை வேளையில் கோடை வெப்பம் தணிந்து இதமான குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.
சங்கராபுரம்
இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் பரலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. திடீரென மழை பெய்ததால் பாதசாரிகள் பலர் மழையில் நனைந்தபடி சென்றதை காணமுடிந்தது.