சாத்தூர் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை
சாத்தூர் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் மரங்கள் சாய்ந்து விழுந்தன.
சாத்தூர்,
சாத்தூர் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் மரங்கள் சாய்ந்து விழுந்தன.
பலத்த மழை
சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல சிரமப்பட்டு வந்தனர்.
கடைகள், முக்கிய வீதிகளில் மக்களின் நடமாட்டம் வெகுவாக குறைந்தது. இந்தநிலையில் நேற்று காலை வழக்கம் போல் வெயில் வாட்டி வதைத்தது. பின்னர் மதியம் 3 மணி அளவில் சாத்தூர், சடையம்பட்டி, சத்திரப்பட்டி, ஓ.மேட்டுப்பட்டி, ரெங்கப்பநாயக்கன்பட்டி, படந்தால் ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. பலத்த காற்றினால் சாத்தூர் பகுதியில் சாலைகளில் வைக்கப்பட்டிருந்த சாலை தடுப்புகள் சாய்ந்து கீழே விழுந்தது.
மரங்கள் சாய்ந்தன
மேலும் அம்மாபட்டி போலீஸ் நிலையம் அருகில் 10 ஆண்டுகள் பழமையான வேப்பமரம் சாய்ந்தது. பெருமாள் கோவில் தெற்கு ரத வீதியில் 15 ஆண்டுகள் பழமையான மரம் கீழே சாய்ந்தது. நியூ காலனி பகுதியில் 20 ஆண்டுகள் பழமையான கொன்றை மரம் சாய்ந்தது. அதன் அருகில் இருந்த மின்கம்பம் முறிந்தது.
இதனால் எந்தவித பாதிப்பும் இல்லை. இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சாய்ந்து கிடந்த மரத்தை எந்திரம் மூலம் அகற்றி அப்புறப்படுத்தினர். சில பகுதிகளில் 3 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை செய்யப்பட்டது. இந்த திடீர் மழையினால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இரவு முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.