அரசு பள்ளிகளில் 'வானவில் மன்றம்': முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் தொடங்கிவைத்தார்


அரசு பள்ளிகளில் வானவில் மன்றம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் தொடங்கிவைத்தார்
x

மாணவர்களிடம் அறிவியல், கணித ஆர்வத்தை தூண்டும் வகையில் அரசு பள்ளிகளில் `வானவில் மன்றம்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திருச்சியில் தொடங்கிவைத்தார்.

திருச்சி,

பள்ளி கல்வித்துறையில் பல புதிய திட்டங்களை தமிழக அரசு வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.

ரூ.25 கோடியில் திட்டம்

அதன்படி பள்ளி கல்வித்துறையின் 2022-23-ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் அறிவியல், கணித ஆர்வத்தை தூண்டும் வகையில் நடமாடும் அறிவியல் மற்றும் கணித ஆய்வகங்கள் மூலம் மாதந்தோறும் அறிவியல் பரிசோதனைகள் மற்றும் கணித பாடம் உரிய வழிகாட்டுதலுடன் மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் என்றும், மாணவர்களே உருவாக்கிய அறிவியல் கருவிகளும் காட்சிப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அத்துடன் இதற்காக 25 லட்சம் அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் ஒரு திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

'வானவில் மன்றம்' தொடக்கம்

அதன்படி, அரசு பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் கணித பாடங்களில் ஆர்வத்தை தூண்டும் வகையில் "வானவில் மன்றம்" திட்ட தொடக்க விழா திருச்சி காட்டூர் பாப்பாக்குறிச்சி அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று காலை நடந்தது.

விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, "வானவில் மன்றம்" திட்டத்தை தொடங்கிவைத்து, 100 நடமாடும் அறிவியல் மற்றும் கணித ஆய்வக வாகனங்களைக் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

அறிவியல் பரிசோதனை

இதைத்தொடர்ந்து, அந்த பள்ளியின் வகுப்பறையில் அறிவியல் ஆசிரியை வழிகாட்டுதலின்படி 'ஒளியின் பாதை' என்ற தலைப்பில் 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவிகள் முதல்-அமைச்சர் முன்னிலையில் அறிவியல் பரிசோதனைகளை மேற்கொண்டனர். பின்னர், அப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளிடம் அவர் கலந்துரையாடினார்.

தொடக்க விழாவுக்கு அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கினார். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வரவேற்று பேசினார்.

பயப்பட வேண்டாம்

அப்போது அவர், 'அரசியலமைப்பு சட்டத்தின் சாசனத்தின் 51 ஏ எச் பிரிவு அனைத்து பொதுமக்களும் அறிவியல் மனப்பான்மையை பெற வேண்டும் என கூறுகிறது. அதனை செயல்படுத்தும் வண்ணமாக இந்த திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. கணிதம் மற்றும் அறிவியலை பார்த்து மாணவர்கள் பயப்பட வேண்டாம். அது உங்கள் மூளைக்குள் இருக்கிறது. அதை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் உங்களிடம் இருந்தால் போதும். இந்த திட்டத்திற்காக 710 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதனை மாணவ-மாணவிகள் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்' என்று கூறினார்.

விழாவில் எம்.பி.க்கள் திருச்சி சிவா, சு.திருநாவுக்கரசர், பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, பள்ளி கல்வி ஆணையர் க.நந்தகுமார், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்குனர் ரா.சுதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

வானவில் மன்றத்தின் நோக்கங்கள்

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படும் வானவில் மன்றத்தின் நோக்கம் "எங்கும் அறிவியல், யாவும் கணிதம்" என்பதாகும். அரசு பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவும், எதையும் ஆராய்ந்து பார்த்து கேள்வி கேட்கும் பழக்கத்தை உருவாக்கவும், அறிவியல் மற்றும் கணிதம் தொடர்பாக, புதியவற்றை அறிந்து கொள்ளும் எல்லையில்லா ஆர்வத்தை உண்டாக்கவும் இம்மன்றம் உருவாக்கப்பட்டு உள்ளது.

அரசு பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அறிவியலையும், கணிதத்தையும் கற்றுத்தரும் ஆசிரியர்களுக்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

கற்பித்தலில் இதுவரை அவர்கள் கையாண்ட வழிமுறைகளை பகிர்ந்து கொள்வதற்கும், இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்திட ஆலோசனைகள் வழங்குவதற்கும், மாநிலம் முழுவதும் இத்திட்டத்தில் பங்கு பெற விருப்பம் தெரிவித்த ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

710 ஸ்டெம் கருத்தாளர்கள்

இத்திட்டத்திற்காக தமிழ்நாடு முழுவதும் 710 ஸ்டெம் கருத்தாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் நடமாடும் அறிவியல் மற்றும் கணித பரிசோதனை ஏதுவாளர்களாக செயல்படுவார்கள். மேலும், அவர்கள் 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு எளிய அறிவியல் பரிசோதனைகளுக்கான கருவிகளை உடன் எடுத்து வருவார்கள்.

அரசு பள்ளிகள்தோறும் வரும் கருத்தாளர்கள் பரிசோதனைகளுக்கான ஏற்பாடுகளை செய்து, ஆசிரியர்கள் துணையோடு மாணவர்களுக்கு பரிசோதனைகளை செய்து காண்பிப்பார்கள். மேலும், ஆசிரியர்களுக்கு அறிவியல் மற்றும் கணித வல்லுநர்களுடன் இணைய வழி (டெலிகிராம்) கலந்துரையாடலுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

இதன் மூலம் சக ஆசிரியர்களுடனான துறை சார்ந்த உரையாடலுக்கு வாய்ப்பு தருவதோடு, பிற ஆசிரியர்கள் அறிவியலையும், கணிதத்தையும் எவ்வாறு கற்றுத்தருகிறார்கள், மாணவர்களின் சந்தேகங்களை எவ்வாறு கையாள்கிறார்கள் என்று அறிந்து கொள்வதோடு, கற்பித்தல் முறைகளையும் பிறரிடம் இந்நிகழ்வின் மூலம் பகிர்ந்து கொள்ளலாம். நவீன தொழில்நுட்பங்களையும், கணிதம் சார்ந்த புதிய யுக்திகளையும் அறிந்து கொள்வதுடன், அவற்றை வகுப்புகளில் குழந்தைகளிடத்தில் பகிர்ந்து கொள்ளவும் இந்த கலந்துரையாடல் உதவும்.


Next Story