அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்த 'வானவில் மன்றம்' : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்


அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்த வானவில் மன்றம் : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
x

கோப்புப்படம்

அரசு பள்ளி மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்த ‘வானவில் மன்றம்' நாளை தொடங்கப்பட இருக்கிறது.

சென்னை,

அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளின் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்த வானவில் மன்றம் என்ற அமைப்பை உருவாக்க பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டது.

அதன்படி, 3 ஆயிரத்து 95 உயர்நிலைப் பள்ளிகள், 3 ஆயிரத்து 123 மேல்நிலைப்பள்ளிகள், 6 ஆயிரத்து 992 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 13 ஆயிரத்து 210 அரசு பள்ளிகளில் இந்த வானவில் மன்றம் தொடங்கப்பட இருக்கிறது. இந்த திட்டம் மூலம் 6 முதல் 8-ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வகுப்பறையில் கற்பிக்கப்படும் பாடங்களோடு தொடர்புடைய அறிவியல், கணித பரிசோதனைகளை செய்வதற்கு ஏதுவாக, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் (ஸ்டெம்) கருத்தாளர்கள், பள்ளி ஆசிரியர்களுடன் இணைந்து செயல்படுவார்கள்.

அரசு பள்ளிகளில் இந்த திட்டம் புதுமையான முயற்சியாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் இந்த வானவில் மன்றத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (திங்கட்கிழமை) தொடங்கி வைக்க இருப்பதாகவும், அதனைத் தொடர்ந்து 13 ஆயிரத்து 210 அரசு பள்ளிகளிலும் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கப்பட உள்ளதாகவும் கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story