பரமத்திவேலூரில் அதிகபட்சமாக 98 மி.மீட்டர் மழைபதிவு


பரமத்திவேலூரில் அதிகபட்சமாக 98 மி.மீட்டர் மழைபதிவு
x

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரமத்திவேலூர் பகுதியில் அதிகபட்சமாக 98 மி.மீட்டர் மழைபதிவான நிலையில், தொடர்மழைக்கு இதுவரை 34 ஏரிகள் நிரம்பி உள்ளன.

நாமக்கல்

கனமழை

வங்க கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வுபகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பரவலாக இடைவிடாது கனமழை பெய்தது. அதிகபட்சமாக பரமத்திவேலூர் பகுதியில் 98 மி.மீட்டர் மழை பதிவானது. நேற்று காலை 7 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

பரமத்திவேலூர்-98, ராசிபுரம்-89, மோகனூர்-89, கலெக்டர் அலுவலகம்-74, புதுச்சத்திரம்-66, நாமக்கல்-60, மங்களபுரம்-60, சேந்தமங்கலம்-59, திருச்செங்கோடு-55, கொல்லிமலை-49, குமாரபாளையம்-46, எருமப்பட்டி-35. மாவட்டத்தின் மொத்த மழைஅளவு 780 மி.மீட்டர் ஆகும். சராசரி மழை அளவு 65 மி.மீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

34 ஏரிகள் நிரம்பின

இந்த தொடர்மழைக்கு இதுவரை மாவட்டம் முழுவதும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 79 ஏரிகளில் 34 ஏரிகள் நிரம்பி உள்ளன. 75 சதவீதத்திற்கும் மேல் 4 ஏரிகளும், 50 சதவீதத்திற்கு மேல் 2 ஏரிகளும், 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை 9 ஏரிகளும், 25 சதவீதத்திற்கு கீழ் 6 ஏரிகளும் நிரம்பி உள்ளன. 24 ஏரிகளுக்கு இதுவரை தண்ணீர் வரவில்லை என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதுதவிர உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஏராளமான குளம், குட்டைகளும் நிரம்பி உள்ளன. இதனால் ஆங்காங்கே விவசாய பணிகள் ஜரூராக நடைபெற்று வருகிறது. நாமக்கல் நகரை பொறுத்த வரையில் நேற்று காலையில் விட்டுவிட்டு சாரல்மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் குடைபிடித்து செல்வதை பார்க்க முடிந்தது.


Next Story