மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் தானியங்கி வானிலை கருவி மூலம் மழை அளவு, காற்றின் வேகம் குறித்த தகவல்கள்


மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் தானியங்கி வானிலை கருவி மூலம் மழை அளவு, காற்றின் வேகம் குறித்த தகவல்கள்
x

மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட தானியங்கி வானிலை கருவி மூலம் மாமல்லபுரத்தில் பெய்யும் மழையின் அளவு, காற்றின் வேகம், ஈரப்பதம் பற்றிய வானிலை தகவல்கள் தொல்லியல் துறை இணையதளத்தில் உடனுக்குடன் பதிவு செய்யப்படுகிறது.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் 7-ம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த பல்லவ மன்னர்களால் வடிவமைக்கப்பட்ட கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட புராதன சிற்பங்கள் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய நினைவு சின்னங்களாக திகழ்கிறது. இந்த புராதன சின்னங்களை மத்திய தொல்லியல் துறை பாதுகாத்து பராமரித்து வருகிறது. குறிப்பாக மழை காலங்களில் புராதன சின்னங்களை பாதுகாப்பதில் தொல்லியல் துறை அதிக முக்கியத்தும் கொடுத்து வருகிறது.

அதனால் வானிலை பதிவுக்கு ஏற்ப மழை காலங்களில் மழை நீர் தேங்கி பாதிப்பு ஏற்படாத வகையில் தொல்லியல் துறை தன் பணியாளர்கள் மூலம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.

மழைநீர் தேங்கும் இடங்களில் கால்வாய் வெட்டி தொல்லியல் துறை பணியாளர்கள் மழை நீரை வெளியேற்றுவதை காண முடிந்தது. இந்த ஊரின் வானிலை பற்றிய தகவல் அறிய இதற்கு முன்பு கடற்கரை கோவில் வளாகத்தில் சாதாரண கருவி அமைக்கப்பட்டது. அந்த கருவி நாளடைவில் செயல்படாமல் சிதிலமடைந்து வீணாகி போனது. இதையடுத்து புதிதாக 'ஆட்டோமேடிக் வெதர் ஸ்டேசன்" எனப்படும் தானியங்கி வானிலை கருவி கடற்கரை கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

தினசரி வெப்ப நிலை, மழை பொழிவு மற்றும் அதன் அளவு, காற்றின் வேகம், ஈரப்பதம் உள்ளிட்ட விவரங்கள் இந்த கருவியில் தானாக பதிவாகும். குறிப்பாக கடற்கரையில் வீசும் சூறைக்காற்றில் உப்பு துகள்கள் படிந்து சிற்பங்கள் சிதிலமடைகின்றன. இந்த கருவி மூலம் அடிக்கடி காற்றின் வேகத்தை கண்காணித்து சிற்பங்களின் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க இந்த கருவி உதவியாக இருக்கும் என்றும் தொல்லியல் துறையினர் நம்புகின்றனர். மேலும் இங்கு உடனுக்குடன் பதிவாகும் வானிலை பற்றிய தகவல்களை தொல்லியல் துறை தலைமையகம் இணைய தள தொடர்பு மூலம் இந்த பகுதி வானிலை பற்றிய தகவல்களை நேரடியாக பொதுமக்களும், அதிகாரிகளும் அறிந்து கொள்ளலாம்.


Next Story