தென்னந்தோப்புகளில் தேங்கிய மழைநீர்


தென்னந்தோப்புகளில் தேங்கிய மழைநீர்
x
தினத்தந்தி 14 Nov 2022 12:15 AM IST (Updated: 14 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

நெகமம் பகுதியில் கனமழையால் தென்னந்தோப்புகளில் தேங்கிய மழைநீரை அகற்ற முடியாமல் விவசாயிகள் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் வேர் அழுகல் நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கோயம்புத்தூர்

நெகமம்

நெகமம் பகுதியில் கனமழையால் தென்னந்தோப்புகளில் தேங்கிய மழைநீரை அகற்ற முடியாமல் விவசாயிகள் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் வேர் அழுகல் நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கனமழை

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக நெகமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. இதன் காரணமாக நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

இதற்கிடையில் சில இடங்களில் பி.ஏ.பி. வாய்க்காலிலும் தண்ணீர் திறந்து விட்டுள்ளதால், அங்குள்ள கிணறுகள் நிரம்பி வழிகின்றன. இது தவிர விவசாய நிலங்களிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.

வேர் அழுகல்

நெகமம் பகுதியில் நீண்ட கால பயிரான தென்னை அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது. இங்குள்ள தென்னந்தோப்புகளில் மழைநீர் அதிகளவில் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக வேர் அழுகல் நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அங்கு தேங்கி நிற்கும் மழைநீரை வாய்க்கால் மூலம் விவசாயிகள் வெளியேற்றி வருகின்றனர். எனினும் விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளின் அருகே ஊற்று தோன்றி தண்ணீர் வெளியேறி வருகிறது. இது தென்னந்தோப்புக்குள் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. மழைநீரை வெளியேற்றினாலும், ஊற்று தண்ணீர் வருவதால், அதை நிரந்தரமாக வெளியேற்ற முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

ஆக்சிஜன் கிடைக்காது

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

தென்னந்தோப்பில் தண்ணீர் தேங்கி நிற்கும்போது மரங்களின் வேர்களுக்கு ஆக்சிஜன் கிடைக்காது. அதிக நாட்கள் தண்ணீர் தேங்கி நின்றால் ஆக்சிஜன் கிடைக்காமல் வேர்கள் வலுவிழந்துவிடும். ேமலும் மரங்களுக்கு சத்து பற்றாக்குறை ஏற்பட்டு, விளைச்சல் பாதிக்கப்படும். குறிப்பாக 2 நாட்களுக்கு மேல் தண்ணீர் தேங்கினாலே வேர்கள் இறந்து போய் அழுக தொடங்கிவிடும். மேலும் மரங்கள் சாய்ந்து விடும்.

ஒரு சிலர் தங்களது தோட்டங்களில் பள்ளமான பகுதியில் பண்ணைக்குட்டைஅமைத்து, மழைக்காலம் முடிந்த பிறகு பயன்படுத்தும் வகையில் தண்ணீரை அதில் சேமிக்கின்றனர். ஆனால் மற்றவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story