லங்கா கார்னரில் ரூ.1 கோடியில் மழைநீர் வடிகால்


லங்கா கார்னரில் ரூ.1 கோடியில் மழைநீர் வடிகால்
x
தினத்தந்தி 3 Jun 2023 12:45 AM IST (Updated: 3 Jun 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

கோவை லங்கா கார்னர் ரெயில்வே பாலத்தின் கீழ் மழைநீர் தேங்குவதை தடுக்க ரூ.1 கோடியில் கூடுதல் வடிகால் மற்றும் நீருந்து நிலையம் அமைக்கப்படுகிறது.

கோயம்புத்தூர்

கோவை

கோவை லங்கா கார்னர் ரெயில்வே பாலத்தின் கீழ் மழைநீர் தேங்குவதை தடுக்க ரூ.1 கோடியில் கூடுதல் வடிகால் மற்றும் நீருந்து நிலையம் அமைக்கப்படுகிறது.

லங்கா கார்னர்

கோவை-திருச்சி ரோடு மற்றும் டவுன்ஹால், ரெயில் நிலைய ரோட்டில் வரும் வாகனங்கள் லங்கா கார்னர் ரெயில்வே பாலத் தின் கீழ் வழியாக சென்று வருகின்றன.

இந்த பாலத்தின் கீழ் பகுதி மிகவும் தாழ்வாக உள்ளது. இதனால் மழை பெய்யும் போது மழை நீர் பாலத்தின் கீழ் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது.

அது போன்ற நேரங்களில் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படும். இதனால் வாகனங்கள் மாற்றுப்பாதை யில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே லங்கா கார்னரில் மழைநீர் தேங்குவதை தடுக்க கூடுதல் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

ரூ.1 கோடியில் திட்டம்

இது குறித்து கோவை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

மழை காலத்தில் லங்கா கார்னரில் மழைநீர் தேங்குவதை தடுக்க ரூ.1 கோடியில் வடிகால் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி லங்கா கார்னரில் இருந்து அரசு ஆஸ்பத்திரி பஸ் நிலையம் வழியாக வாலாங்குளம் வரை சுமார் 250 மீட்டர் தூரத்திற்கு கூடுதல் மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தப்படும்.

இது தவிர லங்கா கார்னர் மேம்பாலத்தின் கீழ் ஒரு பள்ளம் தோண்டப்பட்டு, இதில் இரும்பு மூடி அமைக்கப்படும்.

இந்த பள்ளத்தில் சேகரமாகும் மழைநீர் அதிசக்தி வாய்ந்த மோட்டார்கள் மூலம் உறிஞ்சப்பட்டு, கூடுதல் மழைநீர் வடிகால் வழியாக வாலங்குளத்திற்கு கொண்டு செல்லப்படும்.

இதனால் பெரிய மழை பெய்தால் கூட லங்கா கார்னர் ரெயில்வே பாலத்தின் கீழ் மழைநீர் தேங்காது. இந்த பணி 2 மாதத்திற்குள் முடிந்து விடும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story