ராமேசுவரம் கோவிலுக்குள் மழைநீர் புகுந்தது


ராமேசுவரம் கோவிலுக்குள் மழைநீர் புகுந்தது
x
தினத்தந்தி 10 Oct 2022 12:15 AM IST (Updated: 10 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

நள்ளிரவில் பெய்த பலத்த மழை காரணமாக ராமேசுவரம் கோவிலுக்குள் மழைநீர் புகுந்ததால் பக்தர்கள் அவதியடைந்தனர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

நள்ளிரவில் பெய்த பலத்த மழை காரணமாக ராமேசுவரம் கோவிலுக்குள் மழைநீர் புகுந்ததால் பக்தர்கள் அவதியடைந்தனர்.

மழைநீர் புகுந்தது

தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் ராமேசுவரம் பகுதியில் கடந்த சில வாரங்களாகவே வெயிலின் தாக்கம் மிக அதிகமாகவே இருந்தது. இதனிடையே ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் இரவு 1.30 மணியில் இருந்து அதிகாலை வரையிலும் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக இடி,மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பெய்த இந்த பலத்த மழையால் ராமநாதசாமி கோவிலின் சுவாமி சன்னதி பிரகாரம் முழுவதும் மழை நீர் அதிக அளவில் குளம்போல் தேங்கி நின்றது. மழை நீர் செல்லும் பாதை முழுவதும் அடைப்பு இருந்ததால் தண்ணீர் செல்ல முடியாமல் பிரகாரத்திலேயே குளமாக தேங்கி நின்றது. இதனால் நேற்று கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் மழை நீரில் நடந்து ெசன்று தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் அவதி

பிரகாரத்தில் அதிக அளவில் தண்ணீர் தேங்கி நின்றதால் குறிப்பாக வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள் உள்ளிட்டோர் கடும் அவதி அடைந்தனர். பிரகாரத்தில் தேங்கிய மழை நீரை வெளியேற்றும் பணியில் கோவிலின் தற்காலிக தூய்மை பணியாளர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஈடுபட்டனர்.

ஒவ்வொரு முறையும் கனமழை பெய்யும்போது ராமேசுவரம் கோவிலில் சுவாமி சன்னதி பிரகாரத்தில் மழை நீர் தேங்குவது வாடிக்கையாகிவிட்டது. இன்னும் ஒரு சில வாரங்களில் வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்க உள்ள நிலையில் ராமேசுவரம் பகுதியில் இன்னும் 2 மாதத்திற்கு பரவலாக மழை பெய்யும்.

எனவே, அதற்கு முன்னதாக சாமி சன்னதி பிரகாரத்தில் மழை நீர் தேங்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை கோவில் நிர்வாக அதிகாரிகள் உடனடியாக செய்ய வேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கையாகும்.

1 More update

Next Story